பா.ஜ.க. எம்.பி.யை கைது செய்ய வலியுறுத்தி திருச்சியில் ரெயில் மறியல் செய்ய முயன்ற பெண்கள் உள்பட 30 பேர் கைது

பா.ஜ.க. எம்.பி.யை கைது செய்ய வலியுறுத்தி திருச்சியில் ரெயில் மறியல் செய்ய முயன்ற பெண்கள் உள்பட 30 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-05-16 18:45 GMT

பா.ஜ.க. எம்.பி.யை கைது செய்ய வலியுறுத்தி திருச்சியில் ரெயில் மறியல் செய்ய முயன்ற பெண்கள் உள்பட 30 பேரை போலீசார் கைது செய்தனர்.

ரெயில்மறியல் போராட்டம்

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக இருப்பவர் பா.ஜ.க. எம்.பி.யான பிரிஜ் பூஷன் சரண்சிங். இவர், இந்திய மல்யுத்த வீராங்கனைகள் மீது பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாகவும், அவரை பதவிநீக்கம் செய்து உடனே கைது செய்ய வலியுறுத்தியும் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம், இந்திய மாதர் தேசிய சம்மேளனம் ஆகியவை சார்பில் நேற்று ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதற்காக அந்த அமைப்புகளை சேர்ந்தவர்கள் சுமார் 30 பேர் திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையம் முன் நேற்று காலை திரண்டனர். போராட்டத்துக்கு அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலாளர் செல்வகுமார், இந்திய மாதர் தேசிய சம்மேளன மாவட்ட செயலாளர் அஞ்சுகம் ஆகியோர் தலைமை தாங்கினர். ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட பொதுச்செயலாளர் சுரேஷ் போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

தடுத்து நிறுத்திய போலீசார்

இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சிவா, மாவட்ட தலைவர்கள் பார்வதி (இந்திய மாதர் தேசிய சம்மேளனம்), முருகேசன் (அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம்) ஆகியோர் கண்டன உரையாற்றினர். இந்த போராட்டத்தில் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து அவர்கள் ரெயில் மறியல் செய்ய ரெயில் நிலையத்திற்குள் ஊர்வலமாக சென்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை நுழைவு வாயிலுக்கு முன்பே தடுத்து நிறுத்தினர். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் அங்கு தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

30 பேர் கைது

உடனே, போலீசார் அவர்களை வலுக்கட்டாயமாக அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதுதொடர்பாக 30 பேரை கைது செய்த போலீசார், அவர்களை அருகில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் அவர்களை மாலையில் விடுவித்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

திருவெறும்பூர்

இதேபோல் திருச்சி புறநகர் மாவட்ட இந்திய மாதர் தேசிய சம்மேளனம் மற்றும் அனைத்து இந்திய இளைஞர் பெருமன்றம்சார்பில் திருவெறும்பூரில் மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடந்தது. மாதர் சம்மேளன ஒன்றிய செயலாளர் மாரியம்மாள், இளைஞர் பெருமன்ற ஒன்றிய அமைப்பாளர் சிவசங்கரன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி புறநகர் மாவட்ட செயலாளர் ராஜ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்