நெய்வேலியில் பிரியாணி கடை உரிமையாளர் வெட்டிக் கொலை

நெய்வேலியில் பிரியாணி கடை உரிமையாளர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-10-26 18:45 GMT

நெய்வேலி, 

கடலூர் மாவட்டம் நெய்வேலி 20-வது வட்டத்தை சேர்ந்தவர் கண்ணன்(வயது 56). இவருடைய மனைவி கமலா(50). இவர்களுக்கு ஒரு மகளும், 2 மகன்களும் உள்ளனர்.

கண்ணன், 27-வது வட்டத்தில் உள்ள சூப்பர் பஜாரில் பிரியாணி கடை வைத்து நடத்தி வந்தார். நெய்வேலி மட்டுமின்றி சுற்றுப்புற பகுதிகளிலும் இந்த பிரியாணி கடைக்கு கிளைகள் உள்ளன.

நெய்வேலியில் உள்ள கடையில் நேற்று மாலை வியாபாரம் முடிந்ததும் கண்ணன், கடையை பூட்டிவிட்டு மொபட்டில் வீட்டிற்கு புறப்பட்டார். நெய்வேலி நீதிமன்றம் பின்புறம் உள்ள சாலையில் சென்றபோது, அங்கு நின்று கொண்டிருந்த மர்ம கும்பல், அவர் மீது திடீரென கற்களை வீசி தாக்கியது.

கத்தியால் வெட்டிக்கொலை

இதில் நிலைதடுமாறிய கண்ணன், மொபட்டுடன் கீழே விழுந்தார். உடனே அவர் எழுந்து ஓட முற்பட்டார். அதற்குள் அந்த கும்பல் சுற்றி வளைத்து, கண்ணனை கத்தியால் சரமாரியாக வெட்டியது. இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து இறந்தார். இருப்பினும் வெறி அடங்காத அந்த கும்பல், கண்ணனின் முகம் தெரியாத அளவுக்கு கத்தியால் குத்தி சிதைத்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றது.

இதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிா்ச்சியடைந்தனர். பின்னர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் நெய்வேலி தெர்மல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கண்ணனின் உடலை பார்வையிட்டு அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர்.

பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக என்.எல்.சி. பொதுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே இதுபற்றி அறிந்த கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கொலை நடந்த இடத்தை பார்வையிட்டார். பின்னர் கொலையாளிகளை விரைந்து பிடிக்க போலீசாருக்கு உத்தரவிட்டார்.

காரணம் என்ன?

கடந்த ஆகஸ்டு மாதம் கண்ணனின் பிரியாணி கடைக்கு வந்த சிலர் ஓசிக்கு பிரியாணி கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக கண்ணன் கொடுத்த புகாரின் பேரில் தெர்மல் போலீசார் விசாரணை நடத்தினர்.

இதுபற்றி அறிந்த அவர்கள், மறுநாள் கண்ணனின் கடைக்கு வந்து, அவரை கத்தியால் வெட்டி உள்ளனர். இந்த முன்விரோதம் காரணமாக கண்ணன் வெட்டி படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

இந்த கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருவதோடு, கண்ணனை கொலை செய்தவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

நெய்வேலியில் பிரியாணி கடை உரிமையாளர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்