தர்மபுரி மார்க்கெட்டில் ஒரே நாளில் விலை உயர்ந்து குறைந்த பீர்க்கன்காய் கிலோ ரூ.40-க்கு விற்பனை

Update: 2023-07-13 19:30 GMT

தர்மபுரி:

தர்மபுரி மார்க்கெட்டில் ஒரே நாளில் பீர்க்கன்காய் விலை உயர்ந்து இறங்கியது. ஒரு கிலோ ரூ.40-க்கு விற்பனை செய்யப்பட்டது.

பீர்க்கன்காய் சாகுபடி

தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள தோட்டங்களில் பந்தல் அமைத்து பீர்க்கன்காய் சாகுபடி செய்யப்படுகிறது. இதே போல் வீடுகளிலும் பீர்க்கங்காய் செடிகளை வளர்ப்பது வழக்கமாக உள்ளது. நார்சத்து அதிகம் கொண்ட பீர்க்கன்காயில் வைட்டமின் சி, துத்தநாகம், மெக்னீசியம் உள்ளிட்ட பல்வேறு சத்துக்கள் உள்ளன. இதேபோல் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இரும்புச்சத்து பீர்க்கன்காயில் அதிக அளவில் காணப்படுகிறது. ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி வளர்ச்சிதை மாற்றத்தை துரிதப்படுத்தும் இந்த பீர்க்கன்காயை ரத்த சோகை பாதிப்பு உள்ளவர்கள் அதிக அளவில் சாப்பிட டாக்டர்கள் பலர் பரிந்துரைக்கின்றனர்.

விலை உயர்வு

தர்மபுரி உழவர் சந்தையில் கடந்த 11-ந் தேதி ஒரு கிலோ பீர்க்கன்காய் ரூ.32 முதல் ரூ.34 வரை விற்பனை செய்யப்பட்டது. நேற்று முன்தினம் பீர்க்கன்காய் வரத்து குறைந்ததால் திடீரென விலை உயர்ந்தது. தர்மபுரி உழவர் சந்தையில் நேற்று முன்தினம் ஒரு கிலோ பீர்க்கன்காய் ரூ.42-க்கு விற்பனையானது. வெளி மார்க்கெட்டுகளில் ஒரு கிலோ பீர்க்கன்காய் ரூ.50 முதல் ரூ.55 வரை விற்பனை செய்யப்பட்டது. பீர்க்கன்காய் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் நேற்று இந்த நிலை திடீரென மாறியது. அதாவது உழவர்சந்தைக்கு பீர்க்கன்காய் வரத்து சற்று அதிகரித்ததால் கிலோவுக்கு 2 ரூபாய் குறைந்து ரூ.40-க்கு விற்பனை ஆனது குறிப்பிடத்தக்கது. வெளி மார்க்கெட்டில் கிலோ ரூ.50 என்ற விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்