பறவைகள் இல்லாமல் வெறிச்சோடிய மேலச்செல்வனூர் சரணாலயம்

சீசன் தொடங்கியும் தண்ணீர் இல்லாததால் பறவைகள் இல்லாமல் சாயல்குடி அருகே உள்ள மேலச்செல்வனூர் பறவைகள் சரணாலயம் வெறிச்சோடி காணப்படுகிறது.

Update: 2022-11-24 15:39 GMT

சாயல்குடி, 

சீசன் தொடங்கியும் தண்ணீர் இல்லாததால் பறவைகள் இல்லாமல் சாயல்குடி அருகே உள்ள மேலச்செல்வனூர் பறவைகள் சரணாலயம் வெறிச்சோடி காணப்படுகிறது.

சரணாலயங்கள்

ராமநாதபுரம் மாவட்டத்தில் தேர்த்தங்கல், சக்கரகோட்டை கண்மாய், மேலச்செல்வனூர், காஞ்சிரங்குடி, சித்திரங்குடி என 5 பறவைகள் சரணாலயங்கள் அமைந்து உள்ளன.

ராமநாதபுரத்தில் இருந்து சுமார் 40 கிலோமீட்டர் தொலைவிலும் சாயல்குடியில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது மேல செல்வனூர் பறவைகள் சரணாலயம்.சுமார் 520 எக்டேர் பரப்பளவில் மிகப்பெரிய பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது.

அதுபோல் மேலச்செல்வனூரில் உள்ள பறவைகள் சரணாலயத்திற்கு ஆண்டுதோறும் நவம்பர் மாதத்தில் இருந்து பறவைகள் வரதொடங்கும். இவ்வாறு வரும் பறவைகள் சரணாலயத்தின் உள்ள மரக்கிளைகளில் கூடுகட்டி முட்டை யிட்டு குஞ்சு பொரித்து அதன் பின்னர் ஏப்ரல் அல்லது மே மாதம் மீண்டும் திரும்பி செல்லும். இந்த பறவைகள் சரணாலயத்திற்கு மஞ்சள் மூக்கு நாரை, செங்கால் நாரை, சாம்பல் நிற நாரை, வெள்ளைநிற கூலைக்கடா, சாம்பல் நிற கூலைக்கடா உள்ளிட்ட ஏராளமான பறவைகள் வரும்.

மழை பெய்யவில்லை

இந்த நிலையில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை சீசன் தொடங்கி 3 வாரங்கள் கடந்த பின்னரும் ராமநாதபுரம் மாவட்டத்தில் போதிய அளவு மழை பெய்யவில்லை. இதனால் இந்த பறவைகள் சரணாலயத்தில் சீசன் தொடங்கியும் இதுவரையிலும் பறவைகள் வராததால் மரக்கிளைகளில் பறவைகள் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது.

வைகை அணையில் இருந்து மேலச்செல்வனூர் பறவைகள் சரணாலயத்திற்கு தண்ணீர் கொண்டு வரப்படும் பாதை முழுவதும் தூர்வாரப்படாமல் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளதால் வைகை தண்ணீர் வரத்து இல்லாமல் உள்ளது. இதுகுறித்து கீழக்கரை வனச்சரகர் செந்தில்குமார் கூறிய தாவது:- ஆண்டுதோறும் இந்த சீசனில் மேலச்செல்வனூர் பறவைகள் சரணாலயத்திற்கு பறவைகள் வரத்தொடங்கி விடும். ஆனால் இந்த ஆண்டு இன்னும் அதிக அளவு மழை பெய்யவில்லை. ஒரு சில பறவைகள் வந்துவிட்டு திரும்பி சென்று விட்டன.

கோரிக்கை

வைகை தண்ணீரை இந்த மேலச் செல்வனூர் பறவைகள் சரணாலயத்திற்கு கொண்டுவரும் பாதைகள் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

வைகை தண்ணீரை கொண்டு வர வேண்டும் என்று மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்