நாகை அருகே நடுக்கடலில் இருதரப்பு மீனவர்கள் மோதல்

மீனவர்கள் மோதல் தொடர்பாக கடலோர பாதுகாப்பு குழும போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-09-29 16:00 GMT

நாகை,

நாகப்பட்டினம் மாவட்டம், தோப்புத்துறை அருகே நடுக்கடலில் இருதரப்பு மீனவர்களிடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பைபர் படகு மீனவர்கள் மீது இரும்பு குண்டுகளை வீசி, விசைப்படகு மீனவர்கள் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் காயமடைந்த செருதூரை சேர்ந்த பைபர் படகு மீனவர்கள் நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நாகையில் பைபர், விசைப்படகுகள் மூலம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். நேற்று சிறுதூர் கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் பைபர் படகுகளில் மீன்பிடிக்கச் சென்றிருந்தனர். அப்போது விசைப்படகு மீனவர்களுக்கும் பைபர் படகு மீனவர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பான காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

அந்த காட்சியில் சிறுதூர் கிராமத்தைச் சேர்ந்த 4 பைபர் படகு மீனவர்கள், இரண்டு விசை படகின் மீது மோதுவது போன்று பதிவாகி இருந்தது. நடுக்கடலில் இருதரப்பு மீனவர்களுக்கிடையே மீன் பிடிப்பதில் தகராறு ஏற்பட்டதாகவும், தகராறில் படகுகளை மோத செய்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. நங்கூரமிட்டு இருந்த பைபர் படகின் கயிற்றை, விசைப்படகு மாட்டி இழுத்துச் சென்றதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில் 4 பைபர் படகுகளில் 2 பைபர் படகுகள் கரை வந்து சேர்ந்துள்ளதாகவும் மற்ற 2 பைபர் படகுகள் கரைக்கு வந்து கொண்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் சிறுதூர் கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் மோதல் குறித்து ஆலோசனைக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளனர். மேலும் இது தொடர்பாக கடலோர பாதுகாப்பு குழும போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்