கிள்ளை அருகே இருதரப்பினர் மோதல்

கிள்ளை அருகே இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது.

Update: 2022-11-30 21:58 GMT


கிள்ளை, 

சிதம்பரம் அடுத்த கிள்ளை அருகே உள்ள கள்ளிமேடு கிராமத்தை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 29). இவரது நெல் வயலுக்கு அங்குள்ள வாய்க்காலில் இருந்து தண்ணீர் பாய்ச்சுவது தொடர்பாக, அதே பகுதியை சேர்ந்த அறிவழகன், ராஜவேல், ராஜமாணிக்கம், சுதந்திரமணி ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் உள்ளது. நேற்று முன்தினம் இரவு மகேந்திரன் மற்றும் எதிர் தரப்பினரிடையே தண்ணீர் பாய்ச்சுவதில் தகராறு ஏற்பட்டது. இதில் மகேந்திரனை கத்தி, கட்டையால் தாக்கினர். காயமடைந்த மகேந்திரன் அண்ணாமலை நகர் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இதற்கிடையே, மகேந்திரன் தரப்பினர் சுதந்திரமணி வீட்டிற்கு சென்று அவரது வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளையும், வெளியே நின்ற ஆட்டோவையும் அடித்து நொறுக்கி சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. சத்தம் கேட்டு வெளியே வந்த சுதந்திரமணி மனைவி மஞ்சுளாவை திட்டி தாக்கி மிரட்டல் விடுத்துள்ளனர். இதில் இரு தரப்பினரும் கிள்ளை போலீசில் புகார் அளித்தனர். மகேந்திரன் கொடுத்த புகாரின் பேரில் அறிவழகன், ராஜவேல், ராஜமாணிக்கம், சுதந்திரமணி ஆகிய 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜமாணிக்கம் (60) என்பவரை கைது செய்தனர்.

சுதந்திரமணி மனைவி மஞ்சுளா (40) கொடுத்த புகாரின் பேரில் மாரிமுத்து, பாலு, பன்னீர், மகேந்திரன் ஆகிய 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்