மதுரை அருகே கோவில் திருவிழாவில் இருதரப்பினர் மோதல்: முன்னாள் எம்.எல்.ஏ. உள்பட 6 பேர் கைது
மதுரை எம்.சத்திரப்பட்டி அருகே கோவில் திருவிழாவில் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் முன்னாள் எம்.எல்.ஏ. உள்பட 6 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
மதுரை எம்.சத்திரப்பட்டி அருகே கோவில் திருவிழாவில் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் முன்னாள் எம்.எல்.ஏ. உள்பட 6 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
கோவில் திருவிழாவில் மோதல்
மதுரை மாவட்டம் எம்.சத்திரப்பட்டி அருகே உள்ள கருவனூர் பகுதியை சேர்ந்தவர் பொன்னம்பலம். இவர் கடந்த 2001-2006-ல் சமயநல்லூர் தொகுதி் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்தார்.
தற்போது கருவனூரில் உள்ள பத்திரகாளியம்மன், பாறைக்கருப்பு அய்யனார் கோவில் திருவிழா ஒரு வாரம் நடந்தது.
இந்த திருவிழாவில் முதல் மரியாதையை பெறுவதில், பொன்னம்பலத்தின் மருமகன் பழனிக்குமாருக்கும், தி.மு.க.வை சேர்ந்த வேல்முருகன் தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அபபோது ஊர் மக்கள் தலையிட்டு சமாதானப்படுத்தினர்.
இதற்கிடையே இந்த விரோதம் காரணமாக, இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது.
கார் எரிப்பு
இதில், முன்னாள் எம்.எல்.ஏ. பொன்னம்பலத்தின் வீட்டின் மீது கற்களை வீசியும், வாகனங்களை அடித்து நொறுக்கியும் ஒரு கும்பல் தாக்கியது. வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த பொன்னம்பலத்தின் காருக்கும் தீ வைத்தது. இதில், கார் சேதமடைந்தது.
இதுதொடர்பாக இருதரப்பை சேர்ந்தவர்களும் எம்.சத்திரப்பட்டி போலீசில் புகார் அளித்தனர்.
பொன்னம்பலம் தரப்பினர் அளித்த புகாரில், தி.மு.க. பிரமுகர் வேல்முருகன், ராஜபாண்டி, செந்தமிழன், கலைவாணன், ராஜ்மோகன், படையப்பா, சங்கர், அருண், ஆனந்த், திருப்பதி, வல்லரசு, ரத்தினவேல், பிரபாகர், திருமூர்த்தி, ஆறுமுகம் உள்ளிட்ட 18 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் வேல்முருகன், செந்தமிழன், ராஜ்மோகன் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
முன்னாள் எம்.எல்.ஏ. கைது
இதே போல் வேல்முருகன் தரப்பினர் அளித்த புகாரின் பேரில் பொன்னம்பலம், தில்லையம்பலம், திருசிற்றம்பலம், பழனிவேல், சின்னகருப்பு, விஜய், வேலுமணி, பிரபு, பழனிகுமார், குமார், வசந்த்கோவிந்த், ஜெயா, கயல்விழி, கார்த்திகா தேவி உள்ளிட்ட 20 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதில் முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பொன்னம்பலம், அவருடைய மகன்கள் திருச்சிற்றம்பலம், தில்லையம்பலம் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். பதற்றம் நிலவுவதால் அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதுதவிர முன்னாள் எம்.எல்.ஏ. காரை எரித்ததாக, அந்த பகுதியை சேர்ந்த 15 பேர் மீதும் சத்திரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.