சட்டவிரோதமான இணையதள மென்பொருளை விற்பனை செய்த பீகார் மாநில வாலிபர் கைது

விரைவாக ஆன்லைனில் ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய பயன்படுத்திய சட்டவிரோதமான இணையதள மென்பொருளை விற்பனை செய்த பீகார் மாநில வாலிபரை ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-09-25 14:48 GMT

விரைவாக ஆன்லைனில் ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய பயன்படுத்திய சட்டவிரோதமான இணையதள மென்பொருளை விற்பனை செய்த பீகார் மாநில வாலிபரை ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் கைது செய்தனர்.

சட்டவிரோதமான மென்பொருள்

வேலூரில் தனியார் ரெயில் தட்கல் டிக்கெட் பதிவு செய்யும் கடைகளில் ஐ.ஆர்.சி.டி.சி. சாப்ட்வேருக்குள் (இந்திய ரெயில்வே உணவு வழங்கல் மற்றும் சுற்றுலா கழகம் மென்பொருள்) சென்று விரைவாக ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்து டிக்கெட் விலையை ரூ.200 முதல் ரூ.500 வரை கூடுதல் விலைக்கு விற்பதாக ரெயில் பாதுகாப்பு படை சீனியர் டிவிஷனல் செக்யூரிட்டி கமிஷனர் ராமகிருஷ்ணனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் கடந்த ஜூலை மாதம் 7-ந் தேதி திருவண்ணாமலை மாவட்ட ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆதித்யாகுப்தா மற்றும் போலீசார் வேலூரில் சோதனை நடத்தினர்.

அப்போது முறைகேடாக ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்த 5 கடைகளில் தீவிர சோதனை நடத்தினர்.

அதில் 2 கடைகளில் சட்டவிரோதமான மென்பொருளை (சாப்ட்வேர்) பயன்படுத்தி ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்து கூடுதல் விலைக்கு விற்றது தெரியவந்தது.

இதையடுத்து அந்த மென்பொருளை விற்றது யார் என்று ரெயில்வே பாதுகாப்பு படை சைபர் பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

பீகார் மாநில வாலிபர் கைது

விசாரணையில் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் இந்த சட்டவிரோத மென்பொருளை விற்றது தெரியவந்தது.

இது குறித்து ரெயில் பாதுகாப்பு படை போலீஸ் இன்ஸ்பெக்டர் அருண்குமார், திருவண்ணாமலை மாவட்ட ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆதித்யாகுப்தா, சைபர் செல் சப்-இன்ஸ்பெக்டர் அரிகிருஷ்ணன் உள்பட 8 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

இதையடுத்து தனிப்படை போலீசார் சட்ட விரோத மென்பொருளை விற்பனை செய்த நபரை பிடிக்க கடந்த 9-ந் தேதி பீகாருக்கு சென்றனர்.

20-ந் தேதி மென்பொருளை விற்ற பீகார் மாநிலம் தானாபூர் பகுதியை சேர்ந்த சைலேஸ் யாதவ் (வயது 27) என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

பின்னர் அவரை போலீசார் நேற்று திருவண்ணாமலைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தியதை தொடர்ந்து வேலூர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு எண்-1-ல் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

3,485 பேரிடம் விற்பனை

இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-

சைலேஷ் யாதவ்விடம் தட்கல் சாப்ட்வேர் ஆல்.இன்என்ற 10 சட்டவிரோதமான இணையதள மென்பொருள் இருந்தது.

இதனை அவர் இந்திய ரெயில்வே உணவு வழங்கல் மற்றும் சுற்றுலா கழகம் மென்பொருளுக்குள் சென்று டிக்கெட் முன் பதிவு செய்வது போல் மென்பொருளை உருவாக்கியவரிடம் இருந்து வாங்கி தன்னுடைய இணையதளத்தில் அறிமுகப்படுத்தி தமிழ்நாடு மட்டுமின்றி நாடு முழுவதும் சுமார் 3,485 பேரிடம் ரூ.2 ஆயிரம் முதல் ரூ.3 ஆயிரத்து 500 வரை விற்று உள்ளார்.

இந்த 10 மென்பொருளின் மூலம் கடந்த 18 மாதத்தில் ரூ.98 லட்சத்து 20 ஆயிரத்து 946 அவருக்கு கிடைத்துள்ளது. இதில் மென்பொருளை உருவாக்கி தந்தவர்களுக்கு போக 30 சதவீதம் அவருக்கு கமிஷனாக கிடைத்துள்ளது.

சைலேஷ் யாதவிற்கு இதன் மூலம் கடந்த மாதம் ரூ.2 லட்சத்து 70 ஆயிரம் கிடைத்துள்ளது.

தீவிர விசாரணை

மேலும் இந்த சட்டவிரோத மென்பொருள் மூலம் ஒரு நாளைக்கு நாடு முழுவதும் சுமார் 7 ஆயிரம் ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதுவரை 1 லட்சத்து 25 ஆயிரத்து 460 டிக்கெட்டுகளை முன்பதிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

கடந்த 18 மாதங்களில் இந்த மென்பொருள் மூலம் எடுக்கப்பட்ட ரெயில் டிக்கெட்டுகளின் மதிப்பு சுமார் ரூ.56 கோடியே 45 லட்சத்து 70 ஆயிரம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்து உள்ளது.

சைலேஷ் யாதவ் இந்த செயலில் ஈடுபடுவதற்கு 13 செல்போன் எண்களை பயன்படுத்தி உள்ளார்.

அவரிடம் ஒரு லேப்டாப் மற்றும் 3 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. மேலும் சைலேஷ் யாதவுக்கு சட்டவிரோத மென்பொருளை விற்பனை செய்த நபர்கள் குறித்தும் தீவிரமாக விசாரணை நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்