பீகார் வாலிபர் கைது

காரைக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் பீகார் வாலிபர் கைது செய்யப்பட்டார்;

Update: 2023-09-26 18:45 GMT

காரைக்குடி அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் திருக்குமரன் (வயது 23). இவர் கழனி வாசல் பகுதியில் உள்ள ஓட்டலுக்கு சென்றபோது அங்கு காரில் வந்த தேவகோட்டையை சேர்ந்த வைரவன் (30), திருவாடானையை சேர்ந்த ராஜேஷ் (31) ஆகியோரோடு தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த வைரவன் துப்பாக்கியை எடுத்து தரையில் சுட்டு திருக்குமரனையும், அவரது ஆதரவாளர்களையும் மிரட்டினார். இது குறித்த புகாரின் பேரில் காரைக்குடி வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து வைரவனையும், ராஜேஷையும் கைது செய்து துப்பாக்கியினை பறிமுதல் செய்தனர். பின்னர் தேவகோட்டையில் உள்ள அவர்களது நண்பர்களின் வீடுகளில் சோதனை நடத்தி மேலும் ஒரு துப்பாக்கி, வாளை கைப்பற்றி மேலும் இருவரை கைது செய்தனர். இச்சம்பவம் நடைபெற்று 2 மாதமான நிலையில் இவர்களுக்கு துப்பாக்கி சப்ளை செய்த சேட்டன் என்ற சுதர்சனம் (42) என்பவரை கடந்த வாரம் கன்னியாகுமரியில் பதுங்கியிருந்தபோது தனிப்படை போலீசார் கைது செய்தனர். தற்போது சேட்டன் என்ற சுதாசனுக்கு பீகாரில் கள்ள துப்பாக்கி விற்பவர்களை அறிமுகப்படுத்திய வேலூரை சேர்ந்த சமீர் (24), சேட்டனுடன் துப்பாக்கி வாங்க பீகார் மாநிலம் பாட்னா சென்ற தேவகோட்டையை சேர்ந்த தற்போது சிவகங்கை மருதுபாண்டியர் நகரில் வசிக்கும் மணிகண்டன் (25) ஆகியோரை காரைக்குடி உதவி போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் தலைமையிலான தனிப்படை போலீசார் கைது செய்தனர். மேலும் இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட பீகார் மாநிலம் பாட்னா இந்திரபுரியை சேர்ந்த ஸ்ரேயாஸ் (30) என்பவரை நேற்று முன்தினம் பீகாரில் காரைக்குடி போலீசார் கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்