தஞ்சை பெரியகோவிலில் சித்திரை திருவிழா:தேரில் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி

தஞ்சை பெரியகோவில் சித்திரை திருவிழாவையொட்டி தேரில் முகூர்த்தக்கால் நடப்பட்டது.

Update: 2023-04-24 19:28 GMT

தஞ்சை பெரியகோவில் சித்திரை திருவிழாவையொட்டி தேரில் முகூர்த்தக்கால் நடப்பட்டது.

தஞ்சை பெரியகோவில்

தஞ்சையில் பெரிய கோவில் மாமன்னர் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டது. ஆயிரம் ஆண்டு கால அதிசயமாக பார்க்கப்படும் இக்கோவில் உலக அளவில் பிரசித்திப்பெற்ற கோவிலாகும். இந்த கோவிலுக்கு தினமும் உள்நாடு மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.

பல்வேறு சிறப்புகள் வாய்ந்த பெரிய கோவிலில் பெருவுடையார் அருள்பாலித்து வருகிறார். பெரியநாயகி அம்மன், வராகி அம்மன், விநாயகர் மற்றும் சுப்பிரமணியர் சன்னதிகளும் உள்ளன. ஆண்டு தோறும் சித்திரை மாதம் பெரிய கோவிலில் சித்திரை திருவிழா 18 நாட்கள் விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

தேரில் முகூர்த்தக்கால்...

அதன்படி இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா கடந்த 17-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து நாள்தோறும் காலை, மாலையில் சாமி வீதி உலா நடைபெற்று வருகிறது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 1-ந் தேதி (திங்கட்கிழமை) நடக்கிறது. அப்போது தஞ்சை மேலவீதி, வடக்குவீதி, கீழவீதி, தெற்குவீதி ஆகிய 4 வீதிகளில் தேர் வலம் வருகிறது. தேரோட்டம் நடைபெறுவதை முன்னிட்டு தஞ்சை மேல வீதி தேர்நிலையில் உள்ள தேரில் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நேற்று காலை நடைபெற்றது.

அபிஷேகம்

முன்னதாக முகூர்த்தக்காலுக்கு மஞ்சள், பால், திரவியப்பொடி உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து தேரில் முகூர்த்தக்கால் நடப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் அரண்மனை தேவஸ்தான உதவி ஆணையர் கவிதா, செயல் அலுவலர் மாதவன், மேற்பார்வையாளர்கள் செந்தில்குமரன், ரெங்கராஜ் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்