பெரிய-சின்ன தேர் வீதி உலா

பெரிய-சின்ன தேர் வீதி உலா நடந்தது.

Update: 2023-04-06 21:35 GMT

தொட்டியம்:

பங்குனி தேர் திருவிழா

தொட்டியம் மதுரைகாளியம்மன் கோவில் பங்குனி தேர் திருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு திருவிழா கடந்த மாதம் 21-ந் தேதி பூச்சொரிதல் விழாவுடன் தொடங்கியது. 28-ந் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும், அதைத்தொடர்ந்து ஆயிரம் பானைகளில் பொங்கல் வைத்து சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது. இந்த திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேர் தலையலங்காரம் நேற்று முன்தினம் அதிகாலை நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து நேற்று மாலை பெரிய தேர் மற்றும் சின்ன தேர் வீதி உலா நடைபெற்றது. அப்போது பக்தர்கள் பெரிய தேர் மற்றும் சின்ன தேரை தலையிலும், தோளிலும் பக்தி பரவசத்துடன் சுமந்து சென்றனர். பெரிய தேரில் ஓலைப் பிடாரி அம்மனும், சின்ன தேரில் மதுரைகாளியம்மனும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

எல்லை உடைக்கும்...

கோவிலில் இருந்து தொடங்கிய வீதி உலா கோட்டைமேடு வழியாக சென்று அழகு நாச்சியம்மன் கோவில் பகுதியை அடைந்தது. இதைத்தொடர்ந்து சந்தைப்பேட்டை, திருச்சி- சேலம் மெயின் ரோடு வழியாக வாணப்பட்டறை மைதானம் சென்று, பின்னர் எல்லை உடைக்கும் திருவிழாவும், வாணவேடிக்கை நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. நேற்று மதியம் திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார், போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் திருவிழாவிற்கான முன்னேற்பாடுகளை நேரில் சென்று ஆய்வு செய்தனர். பின்னர் மதுரைகாளியம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தனர். திருவிழாவிற்கான ஏற்பாடுகளை தொட்டியம் பகுதியை சேர்ந்த பதினெட்டு பட்டி கிராம பொதுமக்கள், கோவில் நிர்வாகம் மற்றும் கோவில் பூசாரிகள் செய்திருந்தனர். திருவிழாவையொட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்