குமரியில் 150 உலமாக்களுக்கு சைக்கிள்

குமரி மாவட்டத்தில் 150 உலமாக்களுக்கு விலையில்லா சைக்கிள்களை அமைச்சர் மனோ தங்கராஜ் வழங்கினார்.

Update: 2022-10-22 18:45 GMT

நாகர்கோவில், 

குமரி மாவட்டத்தில் 150 உலமாக்களுக்கு விலையில்லா சைக்கிள்களை அமைச்சர் மனோ தங்கராஜ் வழங்கினார்.

விலையில்லா சைக்கிள்

குமரி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் உலமாக்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கினார். தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

பின்னர் அவர் பேசியபோது கூறியதாவது:-

குமரி மாவட்டத்தில் கடந்த கால கட்டங்களில் குளங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்ததால் பல்வேறு பணிகள் நடைபெறாமல் இருந்தது. தற்போது குளங்களின் கரையோரங்களிலுள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளது. மேலும் குமரி மாவட்டத்தை பசுமை மாவட்டமாக மாற்றுவதற்காக ஆக்கப்பூர்வமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குமரி மாவட்டத்தில் சாதி, மதம், இனம், மொழி உள்ளிட்டவைகளுக்கு அப்பாற்பட்டு அனைவருக்கும் அனைத்து நலத்திட்டங்களும் சென்றடைய வேண்டும் என்பதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக குமரி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 120 ஆண்கள், 30 பெண்கள் என மொத்தம் 150 உலமாக்களுக்கு தலா ரூ.4,500 வீதம் ரூ.6.75 லட்சம் மதிப்பிலான விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டு உள்ளது.

நலத்திட்ட உதவிகள்

குமரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் மிஷன் வாத்சல்யா திட்டத்தின் கீழ் 13 குழந்தைகளுக்கு 1-4-2022 முதல் 31-3-2023 முடிய 12 மாதங்களுக்கு ரூ.4000 வீதம் நிதி ஆதரவு அவரவர் வங்கி கணக்கில் பெற்றுக் கொள்வதற்கான ஆணை வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசால் வழங்கப்பட்டு வரும் அனைத்து நலத்திட்ட உதவிகளையும் பொதுமக்கள் பெற்று பயன்பெறலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சிவப்பிரியா, மாவட்ட வன அலுவலர் இளையராஜா, நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தனபதி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நல அலுவலர் (பொறுப்பு) நாகராஜன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சகிலா பானு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்