ஊராட்சி மன்ற தலைவர் வீட்டில் சைக்கிள் திருட்டு
ஊராட்சி மன்ற தலைவர் வீட்டில் சைக்கிள் திருட்டுபோனது.
செந்துறை:
அரியலூர் மாவட்டம், செந்துறை தாலுகா அலுவலகம் எதிரே வசிப்பவர் செல்லம் கடம்பன். இவர் செந்துறை ஊராட்சி மன்ற தலைவராக உள்ளாா். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை இவரது வீட்டுக்கு ஆயுதங்களை சாணை பிடிப்பது போல் ஒருவர் வந்துள்ளார். அவர் செல்லம் கடம்பனிடம் பேசி, கத்தி மற்றும் வீட்டு உபயோக பொருட்களை சாணை பிடித்துவிட்டு வீட்டை நோட்டமிட்டுள்ளார். அப்போது அங்கிருந்த சைக்கிளை பார்த்து கையெடுத்து கும்பிட்டு விட்டு சென்றார். மேலும் வீட்டில் செல்லம் கடம்பன் மற்றும் அவரது மகள் மட்டுமே இருப்பதை அறிந்த அந்த நபர், மீண்டும் மாலை நேரத்தில் வந்து வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த சைக்கிளை திருடி சென்றார். இந்த காட்சிகள் அனைத்தும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் குறித்து செல்லம் கடம்பன் கொடுத்த புகாரின்பேரில் செந்துறை போலீசார், கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே ஊராட்சி தலைவர் வீட்டின் அருகில் உள்ள கட்டிடத்தில் இருந்த மின் கேபிள்கள் மற்றும் எல்.இ.டி. விளக்கு கடந்த மாதம் திருட்டு போனது. மேலும் பட்டப்பகலில் முன்னாள் பி.எஸ்.என்.எல். அதிகாரி வீட்டின் பூட்டை உடைத்து, ரூ.1 லட்சத்தை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.
அதேபோல் கடந்த வாரம் ஆதிகுடிக்காடு மற்றும் நந்தையன்குடிக்காடு கிராமங்களில் நள்ளிரவில் அடுத்தடுத்து 4 வீடுகளில் மர்ம நபர்கள் புகுந்து பெண்களிடம் 8 பவுன் தங்கச்சங்கிலியை பறித்து சென்றனர். பகலில் வீடுகளில் பெண்கள் மட்டுமே வசிக்கும் இது போன்ற பகுதிகளை நோட்டமிட்டு, மர்ம நபர் கைவரிசை காட்டி உள்ளாரா? என்பது குறித்து செந்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். செந்துறை பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர் திருட்டு சம்பவம் நடைபெறும் நிலையில் ஊராட்சி மன்ற தலைவர் வீட்டிலேயே பட்டப்பகலில் நடைபெற்ற இந்த திருட்டு சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.