பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள் போட்டி
தஞ்சையில், அண்ணா பிறந்த நாளையொட்டி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள்போட்டி நடத்தப்பட்டது.;
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி ஆண்டுதோறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள்போட்டி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு சைக்கிள் போட்டி நேற்று நடந்தது. தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு அரங்கத்தில் இருந்து காலை 7 மணிக்கு போட்டி தொடங்கியது. 13 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 15 கி.மீ.தூரமும், 15 மற்றும் 17 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 20 கி.மீ.தூரமும், 13 வயதிற்குட்பட்ட மாணவிகளுக்கு 10 கி.மீ. தூரமும், 15 மற்றும் 17 வயதிற்குபட்ட மாணவிகளுக்கு 15 கி.மீ. தூரமும் போட்டி நடத்தப்பட்டது.
500 பேர் பங்கேற்பு
போட்டிகளை மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி ஆகியோர் தொடங்கி வைத்தனர். மாவட்ட விளையாட்டு அலுவலர் அந்தோணிஅதிஷ்டராஜ் வரவேற்றார். போட்டி பாலாஜி நகர், ஈஸ்வரி நகர், மருத்துவக் கல்லூரி சாலை வழியாக பிள்ளையார்பட்டி புறவழிச்சாலை ரவுண்டானா வரை சென்றடைந்து மீண்டும் அதே வழியாக அன்னை சத்யா விளையாட்டு அரங்கம் வரை நடத்தப்பட்டது.
இப்போட்டியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மிதிவண்டி சங்க தலைவர் டாக்டர் சதாசிவம், செயலாளர் நெப்போலியன், தூய வளனார் பொறியியல் கல்லூரி உடற்கல்வி இயக்குனர் தர்மலிங்கம் ஆகியோர் முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்கு பரிசு வழங்கினர்.
பரிசளிப்பு
இதில் முதல் 3 இடங்களை பெற்றவர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம், ரூ.3 ஆயிரம், ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டது. 4 முதல் 10-ம் இடம் வரை வெற்றி பெற்றவர்களுக்கு தலா ரூ.250-ம் வழங்கப்பட்டது. போட்டியில் மாவட்ட ஆக்கி பயிற்சியாளர் அன்பழகன், கைப்பந்து பயிற்றுனர் மகேஷ்குமார், நீச்சல் பயிற்றுனர் ரஞ்சித்குமார், தடகள பயிற்றுனர் நீலவேணி மற்றும் உடற்கல்வி ஆசிரிய-ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட கூடைப்பந்து பயிற்சியாளர் பாபு நன்றி கூறினார்.