பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் போட்டி

அண்ணா பிறந்த நாளையொட்டி திருவாரூரில் வருகிற 14-ந் தேதி பள்ளி மாணவ-மாணவிகளுக்கு சைக்கிள் போட்டி நடக்கிறது என கலெக்டர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.

Update: 2023-10-10 18:45 GMT


அண்ணா பிறந்த நாளையொட்டி திருவாரூரில் வருகிற 14-ந் தேதி பள்ளி மாணவ-மாணவிகளுக்கு சைக்கிள் போட்டி நடக்கிறது என கலெக்டர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.

சைக்கிள் போட்டி

திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணா பிறந்த தினத்தினை கொண்டாடும் வகையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், திருவாரூர் மாவட்ட விளையாட்டு கழகம் சார்பில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு சைக்கிள் போட்டி வருகிற 14-ந் தேதி காலை 7 மணிக்கு நடக்கிறது.

போட்டியானது திருவாரூர் நகராட்சி அலுவலகத்தில் தொடங்கி மேலவீதி, வடக்குவீதி, கீழவீதி, தெற்கு வீதி வழியாக நடத்தப்படவுள்ளது.

போட்டியின் விதிமுறைகளாக, போட்டியில் கலந்துகொள்ளும் மாணவ-மாணவிகள் தங்களது சொந்த சைக்கிள்களை (இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சைக்கிள்கள் மட்டும்) கொண்டு வர வேண்டும்.

வயது சான்றிதழ்

போட்டி தொடங்குவதற்கு 1 மணி நேரத்திற்கு முன்னரே போட்டி நடத்தப்படும் இடத்திற்கு வயது சான்றிதழுடன் வர வேண்டும். சைக்கிள் போட்டிகள் 13-வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 15 கிலோ மீட்டர் தூரமும், மாணவிகளுக்கு 10 கிலோ மீட்டர் தூரமும் நடக்கிறது.

15 மற்றும் 17 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 20 கிலோ மீட்டர் தூரமும், மாணவிகளுக்கு 15 கிலோ மீட்டர் தூரமும் நடத்தப்படவுள்ளது. இரண்டு பிரேக்குகளுடன் கூடிய சாதாரண சைக்கிளாக இருத்தல் வேண்டும். மேலும் சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியரிடமிருந்து கட்டாயமாக வயது சான்றிதழ் பெற்று வர வேண்டும்.

பரிசு

இப்போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக தலா ரூ.5 ஆயிரம் வீதம் ரூ.30 ஆயிரமும், 2-ம் பரிசாக தலா ரூ.3 ஆயிரம் வீதம் ரூ.18 ஆயிரமும், 3-ம் பரிசாக தலா ரூ.2 ஆயிரம் வீதம் ரூ.12 ஆயிரம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும். எனவே திருவாரூர் மாவட்ட பள்ளி மாணவ-மாணவிகள் இப்போட்டியில் கலந்து கொண்டு பயன் பெற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்