ரூ.66 லட்சத்தில் புதிய வகுப்பறை கட்ட பூமி பூஜை
அரக்கோணம் அருகே ரூ.66 லட்சத்தில் புதிய வகுப்பறை கட்ட பூமி பூஜை நடைபெற்றது.
அரக்கோணம் அருகே மேல்பாக்கம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாடு உட்கட்டமைப்பு திட்டம் மூலம் ரூ.66 லட்சத்தில் 4 புதிய வகுப்பறை கட்ட பூமி பூஜை நடந்தது. ராணிப்பேட்டை மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் மா.லோகநாயகி தலைமை தாங்கினார். மேல்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் சுந்தரம், துணைத்தலைவர் ஜெயஸ்ரீ பாஸ்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய கவுன்சிலர் செ.நரேஷ் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக அரக்கோணம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் நிர்மலா சவுந்தர் கலந்து கொண்டு புதிய வகுப்பறை கட்ட அடிக்கல் நாட்டி வைத்து இனிப்பு வழங்கினார்.
விழாவில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெங்கடேசன், சுரேஷ் சவுந்தரராஜன், பள்ளி தலைமை ஆசிரியர் தேவராஜ், வார்டு உறுப்பினர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.