ரூ.2¾ கோடியில் சாலை அமைக்க பூமி பூஜை
ரூ.2¾ கோடியில் சாலை அமைக்க பூமி பூஜை நடைபெற்றது.
தமிழக முதல்-அமைச்சரின் கிராம சாலைகள் திட்டம் கீழ் குளித்தலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தண்ணீர்பள்ளி - சிவாயம் சாலை, வை.புதூர் - மையிலாடி சாலை மற்றும் அய்யர்மலை குமாரமங்கலம் சாலை முதல் சல்லமடைவரை என 3 இடங்களில் மொத்தம் ரூ.2 கோடியே 71 லட்சத்து 5 ஆயிரம் மதிப்பில் சாலைகள் அமைக்க பூமி பூஜை நேற்று நடைபெற்றது. இதில் தண்ணீர்பள்ளி, மையிலாடி, ஈச்சம்பட்டி நால்ரோடு ஆகிய பகுதிகளில் நடந்த பூமி பூஜை நிகழ்ச்சியில் குளித்தலை எம்.எல்.ஏ. மாணிக்கம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.
அதுபோல சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் கோட்டமேடு மற்றும் சத்தியமங்கலம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் தலா ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறைகளையும் அவர் தொடங்கி வைத்தார். மேலும் மையிலாடி பகுதிகளில் 2 புதிய மின்மாற்றி இயக்கத்தையும் அவர் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் தேன்மொழி, தி.மு.க. குளித்தலை மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் தியாகராஜன், ஊராட்சி மன்ற தலைவர்கள், செயலாளர்கள், கட்சி நிர்வாகிகள், ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.