ரூ.2 கோடியில் சாலை அமைக்க பூமி பூஜை

கன்னிவாடி பேரூராட்சி பகுதியில் ரூ.2 கோடியில் சாலை அமைக்க பூமிபூஜை நடந்தது. இதில் அமைச்சர் இ.பெரியசாமி பங்கேற்றார்.

Update: 2023-08-15 00:00 GMT

ரூ.2 கோடியில் சாலை

கன்னிவாடி பேரூராட்சி பகுதியில் ரூ.2 கோடியே 12 லட்சம் மதிப்பில் தார்சாலை, சிமெண்டு சாலை அமைப்பதற்கான பூமிபூஜை கன்னிவாடியில் நேற்று நடந்தது. இதற்கு கலெக்டர் பூங்கொடி தலைமை தாங்கினார்.

திண்டுக்கல் மாவட்ட தி.மு.க. பொருளாளர் சத்தியமூர்த்தி, ஒன்றியக்குழு தலைவர் சிவகுருசாமி, தி.மு.க. பொறுப்பாளர்கள் குமரேசன், விவேகானந்தன், பேரூராட்சிகள் உதவி இயக்குனர் மனோரஞ்சிதம், தி.மு.க. மாவட்ட பிரதிநிதி பெருமாள், பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயபாலு, துணைத்தலைவர் கீதா, இளைஞர் அணி பொறுப்பாளர் ராஜேஷ் பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூராட்சி தலைவர் தனலட்சுமி சண்முகம் வரவேற்றார்.

விழாவில் அமைச்சர் இ.பெரியசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார். அதன்படி ரூ.57 லட்சத்தில் ரெட்டியார்பட்டி காலனி தார்சாலை, கால்நடை மருத்துவமனை சாலை, கணபதி நகர், மாரியம்மன் கோவில் உள்ளிட்ட இடங்களில் ரூ.1 கோடியே 55 லட்சம் மதிப்பில் சிமெண்டு சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.

196 குடிநீர் தொட்டிகள்

இதைத்தொடர்ந்து நவாப்பட்டியில் பகுதி ரேஷன் கடை அமைச்சர் திறந்து வைத்து பேசினார். அப்போது அவர் பேசுகையில், தி.மு.க. ஆட்சி காலத்தில் ஆடலூர்-பன்றிமலை, தோனிமலை, சோலைக்காடு உள்ளிட்ட மலைக்கிராமங்களில் சாலை வசதி செய்து கொடுக்கப்பட்டது.

வத்தலக்குண்டு-சோலைக்காடு இடையே சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. மலைக்கிராம மக்களுக்கு செல்போன், இணையதள தகவல் தொடர்பு தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

ரெட்டியார்சத்திரம் அரசு கலைக்கல்லூரிக்கு விரைவில் புதிய கட்டிடம் கட்டப்படும். ரெட்டியார் சத்திரத்தில் அரசு பொறியியல் கல்லூரி தி.மு.க. ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்டது.

காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் ரூ.208 கோடியில் 196 இடங்களில் குடிநீர் தொட்டிகள் கட்டப்படுகின்றன. அனைத்து கிராமங்களிலும் குடிநீர், தெருவிளக்கு, சாலை வசதிகள் செய்து கொடுக்கப்படுகிறது என்றார்.

இதற்கிடையே பொதுமக்களிடம் இருந்து அவர் கோரிக்கை மனுக்களை பெற்றார். அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் உறுதி அளித்தார். விழாவில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மலரவன், கிருஷ்ணன், தி.மு.க. நகர செயலாளர் இளங்கோவன், நிர்வாகிகள் சர்புதீன், கலையரசன், தேவேந்திரன், பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்