அரசு பள்ளியில் ரூ.3 கோடியில் கூடுதல் வகுப்பறைகள் கட்ட பூமி பூஜை
வேலூர் ஈ.வெ.ரா. நாகம்மை அரசு பெண்கள் பள்ளியில் ரூ.3 கோடியில் கூடுதல் வகுப்பறைகள் கட்ட பூமி பூஜை நடந்தது.
வேலூர் கொசப்பேட்டை ஈ.வெ.ரா. நாகம்மை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கூடுதலாக 14 வகுப்பறைகள் 2 அடுக்கு மாடியாக கட்டுவதற்கு நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.2 கோடியே 96 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. இந்த நிலையில் அந்த பள்ளி வளாகத்தில் கூடுதல் வகுப்பறைகள் கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது.
இதேபோன்று மாநகராட்சி 2-வது மண்டலத்துக்கு உட்பட்ட காகிதப்பட்டறை தூய்மை பணியாளர் குடியிருப்பு வளாகத்தில் தூய்மை இந்தியா நகர்புறம் 2.0 திட்டத்தின் கீழ் ரூ.29 லட்சத்தில் ஆண்கள், பெண்களுக்கு தலா 2 குளியலறையுடன் கூடிய 6 கழிப்பறைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு சாய்தளவசதியுடன் கூடிய கழிப்பறை கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகளில் ப.கார்த்திகேயன் எம்.எல்.ஏ., மேயர் சுஜாதா ஆகியோர் கலந்துகொண்டு பூமி பூஜை செய்து கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தனர்.
இதில் பொதுப்பணித்துறை செயற் பொறியாளர் ஜெயராமன், உதவி செயற் பொறியாளர் ராஜாமணி மற்றும் கவுன்சிலர்கள், பள்ளி ஆசிரியர்கள், மாநகராட்சி அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.