வெள்ளிமேடுபேட்டை முதல் புதுச்சேரி வரை ரூ.126½ கோடியில் நான்குவழி சாலைக்கான பூமி பூஜை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தொடங்கி வைத்தார்

வெள்ளிமேடுபேட்டை முதல் புதுச்சேரி வரை ரூ.126½ கோடியில் நான்குவழி சாலைக்கான பூமி பூஜையை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தொடங்கி வைத்தார்.

Update: 2022-08-26 14:25 GMT

மயிலம், 

நான்குவழி சாலையாக மாற்றம்

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே வெள்ளிமேடுபேட்டையில் இருந்து மயிலம் வழியாக புதுச்சேரி செல்ல நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான சாலை உள்ளது. இந்த சாலை வழியாக நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் திருப்பதி, வந்தவாசி, காஞ்சீபுரம், திருத்தணி, மயிலம் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு சென்று வருகின்றன. இது தவிர மேற்கண்ட சாலையோரம் மயிலம் பகுதியில் கல்குவாரிகளும் செயல்பட்டு வருவதால் ஜல்லி, எம்.சாண்ட் போன்றவை ஏற்றிக் கொண்டு டிப்பர் லாரிகளும் வெளியூர்களுக்கு சென்று வருகின்றன. தினமும் இந்த சாலை வழியாக ஏராளமான வாகனங்கள் சென்று வருவதால் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக மாறியதோடு, அடிக்கடி விபத்துகளும் நடைபெற்று வந்தது.

பூமி பூஜை

இதனால் மேற்கண்ட சாலையை நான்குவழிச்சாலையாக மாற்றி விரிவாக்கம் செய்ய முடிவு செய்த தமிழக அரசு, அதற்காக சாலை மேம்பாடுத் திட்டத்தின் கீழ் ரூ.126 கோடியே 60 லட்சம் நிதியை ஒதுக்கியது.

இதையடுத்து அதற்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் பூமி பூஜை நேற்று மயிலத்தில் நடந்தது. மயிலம் சட்டமன்ற உறுப்பினர் சிவக்குமார், திண்டிவனம் சப்- கலெக்டர் அமித் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோட்ட பொறியாளர் சிவனேசா வரவேற்றார். விழாவுக்கு தமிழக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தலைமை தாங்கி பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டி நான்குவழிச்சாலை விரிவாக்கப்பணிகளை தொடங்கி வைத்தார்.

விழாவில் மயிலம் தெற்கு ஒன்றிய செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான வக்கீல் சேதுநாதன், மயிலம் வடக்கு ஒன்றிய செயலாளர் மணிமாறன், மயிலம் ஒன்றியக்குழு தலைவர் யோகேஸ்வரி மணிமாறன், மயிலம் மத்திய ஒன்றிய செயலாளர் செழியன், மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவர் ஷீலா தேவி சேரன், மாவட்ட குழு உறுப்பினர் விஜயன், ஒன்றிய கவுன்சிலர் செல்வகுமார், ஆலகிராமம் ஊராட்சி மன்ற தலைவர் இந்திரா சுரேஷ்குமார் உள்பட பல்வேறு துறைகளை சேர்ந்த அலுவலர்கள், மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் இளநிலை பொறியாளர் ராமு நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்