ரூ.1½ கோடியில் மகாமண்டபம் கட்டும் பணிக்கான பூமி பூஜை
உளுந்தூர்பேட்டையில் திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வரா சாமி கோவில் வளாகத்தில் ரூ.1½ கோடியில் மகாமண்டபம் கட்டும் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது
திருவெண்ணெய்நல்லூர்
வெங்கடேஸ்வராசாமி கோவில்
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் திருச்சி-சென்னை சேலம் சந்திப்பு ரவுண்டானாவில் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ரூ.40 கோடியில் மிகப் பிரம்மாண்டமான முறையில் திருப்பதி வெங்கடேஸ்வரா சாமி கோவில் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் கோவில் வளாகத்தில் கடலூர் ஆர்.ஜி.கன்ஸ்ட்ரக்சன் உரிமையாளர்கள் நாராயணசாமி, ஞானச்சந்திரன் ஆகியோர் சார்பில் ரூ.1½ கோடியில் மகா மண்டபம் கட்டப்படுகிறது. இதற்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது. இதற்கு உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதி முன்னாள் உறுப்பினரும், திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினருமான இரா.குமரகுரு, திருப்பதி தேவஸ்தானம் அறங்காவலர் குழு உறுப்பினரும் எல்.ஏ.சி.(லோக்கல் அட்மினிஸ்ட்ரேடிவ் கமிட்டி) தலைவருமான சேகர்ரெட்டி ஆகியோர் தலைமை தாங்கி பூமி பூஜை செய்து கட்டுமான பணியை தொடங்கி வைத்தனர்.
ஒரு ஆண்டுக்குள்...
முன்னதாக திருவதிகை சரநாராயண பெருமாள் கோவில் தலைமை அர்ச்சகர் ஸ்ரீதர்பட்டாச்சாரியார் சிறப்பு பூஜைகள், ஹோமங்கள், யாகங்கள் நடத்தி நிலத்தில் புனித நீர் ஊற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
வெங்கடேஸ்வரா சாமி கோவிலில் ராஜகோபுரம் மற்றும் திருமண மண்டபம், அன்னதான மண்டபம், விருந்தினர் மாளிகை, விநாயகர் கோவில், குளம், சுற்றுச்சுவர், ஆஞ்சநேயர் சன்னதி உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் திருப்பதி கோவில் வடிவமைப்பில் இன்னும் ஒரு ஆண்டுக்குள் கட்டி முடிக்கப்பட உள்ளது. உளுந்தூர்பேட்டையில் திருப்பதி வெங்கடேஸ்வர சாமி கோவில் கட்டினால் சுற்று வட்டார மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் மற்றும் தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்லும் மக்களும் எளிதாக வந்து சாமி தரிசனம் செய்யலாம் என குமரகுரு கூறினார். நிகழ்ச்சியில் ஊர் முக்கியஸ்தர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், நன்கொடையாளர்கள், சுற்றுவட்டார பகுதி மக்கள் கலந்து கொண்டனர்.