பவானிசாகர் அணைைய பார்வையிட சென்ற கூடுதல் கலெக்டர், அதிகாரிகளை தேனீக்கள் கொட்டியதால் பரபரப்பு
பவானிசாகர் அணையை பார்வையிட சென்ற கூடுதல் கலெக்டர், அதிகாரிகளை தேனீக்கள் கொட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பவானிசாகர்
பவானிசாகர் அணையை பார்வையிட சென்ற கூடுதல் கலெக்டர், அதிகாரிகளை தேனீக்கள் கொட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கூடுதல் கலெக்டர்
ஈரோடு ஊரக வளர்ச்சி துறை கூடுதல் கலெக்டர் மனீஷ் பவானிசாகர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில் ஆய்வு பணிக்காக சென்றார். அப்போது அவருடன் பவானிசாகர் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் கோபாலகிருஷ்ணன், விஜயலட்சுமி மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களும் சென்றிருந்தனர்.
தொடர்ந்து பவானிசாகர் அணையின் மேல் பகுதியை பார்வையிடுவதற்காக கூடுதல் கலெக்டர் மனீசும் 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகளும் சென்றனர். அணையின் மேல் பகுதியில் நீர் போக்கி மதகுகள் இருக்கும் இடத்தில் தேன்கூடுகள் உள்ளன.
தேனீக்கள் கொட்டின
இந்த நிலையில் அதிகாரிகள் அணையின் அழகை ரசித்து பார்த்துகொண்டு இருந்தபோது கூடுகளில் இருந்து திடீரென பறந்து வந்த தேனீக்கள் மனீசையும், அதிகாரிகளையும் கொட்டின.
தேனீக்கள் கொட்டியதில் வலி தாங்க முடியாமல் அதிகாரிகள் அங்கிருந்து அலறி அடித்து ஓடினார்கள். அவர்கள் அனைவரையும் பொதுப்பணித்துறை ஊழியர்கள் 2 வாகனங்களில் ஏற்றி கொத்தமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சில மணி நேரத்துக்கு பின்னர் அவர்கள் அனைவரும் வீடு திரும்பினர்.
பவானிசாகர் அணையின் மேல் பகுதியை பார்வையிட சென்ற அதிகாரிகளை தேனீக்கள் கொட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.