பட்டாளம்மன் கோவில் விழா
கனகமுட்லு கிராமத்தில் பட்டாளம்மன் கோவில் விழாவில் பூசாரியிடம், பக்தர்கள் சாட்டையடி வாங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
கிருஷ்ணகிரி அருகில் கனகமுட்லு கிராமத்தில் உள்ள பட்டாளம்மன் கோவில் திருவிழா நேற்று நடந்தது. இதையொட்டி நேற்று காலை ஏழு கிராமங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்ட பெண்கள் பட்டாளம்மன் கோவிலுக்கு மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக வந்தனர். அங்கு அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் பூஜை செய்தனர். தொடர்ந்து பக்தர்கள் தீ மிதித்து வேண்டுதலை நிறைவேற்றினர். பின்னர் கோவில் பூசாரியிடம் ஏராளமான பக்தர்கள் சாட்டையடி வாங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். இப்பூஜையின் போது வானத்தில் கருடன் தோன்றினால்தான் இவர்கள் அங்கிருந்து புறப்பட்டு மாரியம்மன் கோவிலுக்கு செல்வது வழக்கம். இந்த ஆண்டும் கருடன் தோன்றும்வரை பம்பை அடித்து பட்டாளம்மன் பாடல் பாடி வேண்டி கொண்டனர். பகல் 1.30 மணிக்கு வானத்தில் கருடன் தோன்றியதால், மீண்டும் மா விளக்கை ஊர்வலமாக மாரியம்மன் கோவிலுக்கு எடுத்து சென்று பக்தர்கள் வழிபட்டனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.