எட்டயபுரத்தில் பாரதி விழா

எட்டயபுரத்தில் பாரதி விழா கொண்டாடப்பட்டது.

Update: 2023-09-25 18:45 GMT

எட்டயபுரம்:

எட்டயபுரத்தில் நடைபெற்ற பாரதி விழாவில் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. பங்கேற்று, அவரது உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை ெசலுத்தினார்.

பாரதி விழா

எட்டயபுரத்தில் பாரதி முற்போக்கு வாலிபர் சங்கம், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் சார்பில் 61-வது ஆண்டு மகாகவி பாரதி விழா அவரது மணிமண்டபத்தில், பாரதி முற்போக்கு வாலிபர் சங்கத்தின் சார்பில் நேற்று முன்தினம் மாலையில் தொடங்கியது. மகாகவி பாரதி இல்லத்திலிருந்து பாரதி மணி மண்டபம் வரை ஊர்வலம் நடந்தது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர். பின்னர் மணிமண்டபத்திலுள்ள அவரது உருவச்சிலைக்கு மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நாதஸ்வர நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற மாநில செயலாளர் டாக்டர் அறம் தலைமை தாங்கினார். பாரதி முற்போக்கு வாலிபர் சங்க தலைவர் வெங்கடேஷ் ராஜா வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் "பாரதியின் தாகமும் தவிப்பும்" என்ற தலைப்பில் பேசினார். நிகழ்ச்சியில் எட்டயபுரம் பேரூராட்சி மன்ற தலைவர் ராமலட்சுமி சங்கரநாராயணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பாரதி முற்போக்கு வாலிபர் சங்க செயலாளர் பாலமுருகன் நன்றி கூறினார் தொடர்ந்து தேவராட்டம், பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், பேச்சுப் போட்டி நடைபெற்றன. இரண்டாவது நாளான நேற்று காலை 10 மணி அளவில் கருத்தரங்கம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நாடக நூல் வெளியீட்டு விழா நிகழ்ச்சியும் மாலை 5.30 மணி அளவில் கலை நிகழ்ச்சியும், இரவு 7 மணிக்கு கவியரங்கம், இரவு 8 மணிக்கு பாரதி கண்ட ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம், அடையவில்லை என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது.

நல்லப்பசுவாமி பிறந்தாள் விழா

விளாத்திகுளம் சாலையம் தெருவில் இசை மேதை நல்லப்பசுவாமி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவுக்கு பேரூராட்சி மன்ற தலைவர் சூர்யா அய்யன் ராஜ் தலைமை தாங்கினார். புதூர் தி.மு.க கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், ஒன்றிய குழு உறுப்பினர் சுமதி இமானுவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அவரது நினைவிடத்தில் உள்ள உருவப்படத்திற்கு மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ஞானகுருசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்