விழுப்புரம் மாவட்டத்தில் இணையதள வசதி:உபகரணங்களை சேதப்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கைகலெக்டர் எச்சரிக்கை

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 688 கிராம ஊராட்சிகளிலும் பாரத் நெட் இணையதள வசதிக்கான பணிகள் நடந்து வருகிறது. எனவே அதற்கான உபகரணங்களை சேதப்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கலெக்டர் சி.பழனி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2023-08-05 18:45 GMT


இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-


விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 688 கிராம ஊராட்சிகளிலும் இணையதள வசதி வழங்கும் பாரத் நெட் திட்டம், தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் மூலம் தற்போது முழுவீச்சில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இணையதள இணைப்பு வழங்கும் பணியானது அடுத்த மாதம் (செப்டம்பர்) முதல் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கண்ணாடி இழை இணைப்பானது 85 சதவீதம் மின் கம்பங்கள் மூலமாகவும், 15 சதவீதம் தரை வழியாகவும் இணைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இத்திட்டத்திற்கான ரேக், யு.பி.எஸ். உள்ளிட்ட உபகரணங்கள், ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் உள்ள கிராம ஊராட்சி சேவை மையம் அல்லது அரசு கட்டிடத்தில் நிறுவப்பட்டு வருகிறது. இந்த உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ள அறையானது, சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்ற தலைவரால் தூய்மையாக பராமரிக்கப்பட்டு வருகிறது.

உபகரணங்களைசேதப்படுத்தினால் நடவடிக்கை

இதனால் இத்திட்டம் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும்போது ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் வசிக்கும் மக்கள் அனைவரும் இணையதள வசதிகளை பெற முடியும். ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் பொருத்தப்பட்டுள்ள மின்கலம், யு.பி.எஸ்., ரவுட்டர், ரேக் மற்றும் கண்ணாடி இழை உள்ளிட்ட உபகரணங்கள் அனைத்தும் அரசின் உடைமைகளாகும். எனவே மேற்கண்ட உபகரணங்களை சேதப்படுத்தும் அல்லது திருடும் நபர்கள் மீது இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் காவல்துறையின் மூலம் கடுமையான குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்