பகவதி அம்மன் கோவிலில் ஆவணி அஸ்வதி பொங்கல் விழா
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் ஆவணி அஸ்வதி பொங்கல் விழாவில் திரளான பெண்கள் கலந்து கொண்டு பொங்கலிட்டனர்.
மணவாளக்குறிச்சி:
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் ஆவணி அஸ்வதி பொங்கல் விழாவில் திரளான பெண்கள் கலந்து கொண்டு பொங்கலிட்டனர்.
அஸ்வதி பொங்கல் விழா
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் ஆவணி அஸ்வதி பொங்கல் விழா நேற்று முன்தினம் சுமங்கலி பூஜையுடன் தொடங்கியது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரளான பெண்கள் பங்கேற்றனர்.
2-வது நாளான நேற்று காலை 7 மணிக்கு பஜனை, 10 மணிக்கு ராஜமேளம், 11.30 மணிக்கு அஸ்வதி பொங்கல் வழிபாடு நடந்தது.
பெண்கள் பொங்கலிட்டனர்
இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரளாவில் இருந்தும் ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டு பொங்கலிட்டு அம்மனை வழிபட்டனர். கூட்டம் அதிகமாக இருந்ததால் சாலைஓரத்தில் வைத்தும் பெண்கள் நீண்ட வரிசையில் பொங்கலிட்டதை காண முடிந்தது.
பொங்கலிடும் நிகழ்ச்சியை கங்கா கவுரி ராமகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். வெள்ளிமலை ஆசிரமம் சுவாமி சைதானந்த மகாராஜ், அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், திருக்கோவில் நிர்வாக இணை ஆணையர் ரத்தினவேல் பாண்டியன், கண்காணிப்பாளர் சண்முகம் பிள்ளை, முன்னாள் கண்காணிப்பாளர் ஜீவானந்தம், மராமத்து பொறியாளர் அய்யப்பன், கோவில் மேலாளர் செந்தில்குமார், அறங்காவலர் குழு உறுப்பினர் ராஜேஷ், மண்டைக்காடு பேரூராட்சி தலைவர் ராணி ஜெயந்தி மற்றும் இந்து சேவா சங்கம், தேவி சேவா சங்கம், ஸ்ரீதேவி கலாமன்றம் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அன்னதானம்
பகல் 12.30 மணிக்கு பொங்கலுக்கு தீர்த்தம் தெளித்தல், மதியம் 1 மணிக்கு தீபாராதனையை தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
3-ம் நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 5.30 மணிக்கு திருவிளக்கு பூஜை, 6 மணிக்கு தங்கரதம் பவனி, 6.30 மணிக்கு தீபாராதனை, இரவு 7 மணிக்கு சமய வகுப்பு மாணவர்களுக்கு பரிசளிப்பு, இரவு 8 மணிக்கு அத்தாழ பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.