தேனி-போடி இடையே பணியாளர்கள் சிறப்பு ரெயில் ஆய்வு

தேனி-போடி இடையே பணியாளர்களுக்கான சிறப்பு ரெயில் இயக்கப்பட்டது.

Update: 2023-03-30 18:45 GMT

மதுரை-போடி இடையே அகல ரெயில்பாதை பணிகள் முடிந்து தற்போது தேனி வரை ரெயில் இயக்கப்படுகிறது. போடி வரை பணிகள் முடிந்த போதிலும், கடந்த மாதமே பயணிகள் ரெயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், போடிக்கு பயணிகள் ரெயில் சேவை இன்னும் தொடங்கப்படவில்லை.

இந்நிலையில், தேனி-போடி அகல ரெயில்பாதையில் பணியாளர்கள் சிறப்பு ரெயில் ஆய்வு நேற்று நடத்தப்பட்டது. இதற்காக மதுரையில் இருந்து தேனி வரையிலான பயணிகள் ரெயில் தேனி ரெயில் நிலையத்துக்கு வந்தவுடன் ரெயிலில் இருந்து பயணிகள் அனைவரும் இறங்கினர்.

பின்னர் அந்த ரெயில் 11 பெட்டிகளுடன் ரெயில்வே பணியாளர்களுடன் போடி நோக்கி புறப்பட்டது. போடி ரெயில் நிலையத்தில் பணியாளர்கள் சிறிது நேரம் ஒத்திகை பணியில் ஈடுபட்டனர். பின்னர் அந்த ரெயில் போடியில் இருந்து புறப்பட்டு தேனிக்கு வந்தது. தேனியில் இருந்து வழக்கம்போல், பயணிகளை ஏற்றிக் கொண்டு மாலையில் மதுரைக்கு புறப்பட்டுச் சென்றது. போடி ரெயில் நிலையத்தில் குடிநீர் வசதி, பணியாளர்கள் ஓய்வு அறை போன்ற பணிகள் இன்னும் முழுமை பெறாமல் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால், பணியாளர்கள் ஒத்திகை பணியை முழுமையாக மேற்கொள்ளாமல் சில நிமிடங்களில் முடித்துக் கொண்டனர். அதே நேரத்தில் விரைவில் போடி வரை ரெயில் சேவை தொடங்கப்படும் என்று ரெயில்வே அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்