ரெயிலில் கஞ்சா கடத்திய பெங்களூரு வாலிபர் கைது
ஜோலார்பேட்டை அருகே ரெயிலில் கஞ்சா கடத்திய பெங்களூரு வாலிபர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 18 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
ஜோலார்பேட்டை ரெயில்வே போதை பொருள் தடுப்பு பிரிவு போலீஸ் ஏட்டு அருண்குமார் மற்றும் ரெயில்வே போலீசார் நள்ளிரவு ஒடிசா மாநிலம் ஆட்டியா ரெயில் நிலையத்தில் இருந்து கர்நாடக மாநிலம் மாண்டியா வரை செல்லும் ரெயில்களில் சோதனை மேற்கொண்டனர். அப்போது காட்பாடி ரெயில் நிலையத்தில் இருந்து வந்த ஆட்டியா எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஜோலார்பேட்டை ரெயில் நிலையம் வரை ஓடும் ரெயிலில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தப்படுகிறதா என்பது குறித்து தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது ரெயிலின் பின் புறம் உள்ள பொது பெட்டியில் பயணம் செய்த வாலிபர் வைத்திருந்த 2 பைகளை சந்தேகத்தின்பேரில் சோதனை செய்தனர். அதில் 2 பண்டல்களில் சுமார் 18 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அந்த வாலிபரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவர் பெங்களூரு மாண்டியா பகுதியைச் சேர்ந்த காசியப்பா என்பவரது மகன் சுமந்த் (வயது 21) என்பது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து அவர் மீது ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் புஷ்பா மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 18 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.