தூத்துக்குடி மாவட்டத்தில் மகளிர் உரிமை தொகை திட்ட பயனாளிகள தபால்துறை வங்கியில் கணக்கு தொடங்க சிறப்பு ஏற்பாடு

தூத்துக்குடி மாவட்டத்தில் மகளிர் உரிமை தொகை திட்ட பயனாளிகள் தபால்துறை வங்கியில் கணக்கு தொடங்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Update: 2023-07-20 18:45 GMT

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தபால் நிலையங்களில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறும் பயனாளிகள் ஆதாருடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கு தொடங்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

இது குறித்து தூத்துக்குடி கோட்ட தபால் கண்காணிப்பாளர் மு.பொன்னையா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:-

தபால்துறை வங்கி

இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி, தபால் துறையின் கீழ் இயங்கும் இந்திய அரசுக்கு சொந்தமான வங்கியாகும். இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி அனுகுவதற்கு எளிமையான, குறைந்த கட்டணங்களுடன், நகரங்களில் மற்றும் கிராமங்களில் உள்ள பொதுமக்களுக்கு இருப்பு தொகை இல்லாத எளிய வங்கி சேவை அளிக்கும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டு உள்ளது.

இந்த வங்கி கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து தபால் நிலையங்களிலும் செயல்பட்டு, பொது மக்களுக்கு வங்கி சேவை அளித்து வருகிறது. இந்த கணக்குக்கு இருப்பு தொகை எதுவும் கிடையாது (ஜீரோ பேலன்ஸ்), வங்கிகள் இல்லாத அனைத்து பகுதிகளிலும் குறிப்பாக கிராமபுறத்தில் எளிய முறையில் வங்கி சேவை அளிக்கப்படுகிறது. இந்த சேமிப்பு கணக்கு தொடங்க ஆதார் அட்டை மற்றும் கைபேசி கொண்டு வருவது அவசியம்.

அதாருடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கு தொடங்க அதிகப்படியாக ஒரு நிமிடம் ஆகும். பொதுமக்கள் மாதாந்திர பணத்தை உங்கள் பகுதியில் உள்ள தபால் நிலையங்களிலும், வாசல் தேடி வங்கி என்ற சிறப்பு சேவை மூலம் மாதாந்திர பணத்தை தங்கள் இல்லத்திலேயே தபால்காரர் மூலம் எந்த கட்டணமும் இன்றி பெற்றுக்கொள்ள முடியும். இந்த வங்கியில் தொடங்கப்படும் அனைத்து கணக்குகளுக்கும் கியூ.ஆர் கார்டு வழங்கப்படும். வாடிக்கையாளர்கள் தங்கள் ஆதார் எண், கைரேகை பயன்படுத்தி பணம் எடுத்திட முடியும். மேலும் கணக்கில் உள்ள கைபேசி எண் ஓ.டி.பி மூலம் கணக்கில் இருந்து எளிய முறையில் பணம் போடவும், எடுக்கவும் முடியும்.

சிறப்பு ஏற்பாடு

இந்த வங்கி கணக்கு தொடங்கி கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறும் பயனாளிகள் பயன் பெறலாம். இதற்காக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து தபால் நிலையங்களிலும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. எனவே தபால் நிலையங்களில் இயங்கி வரும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியை அனுகி மாநில அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற ஆதாருடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கு தொடங்கி பயனடையலாம்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்