ஒரே கிராமத்தை சேர்ந்த 7 பெண்கள் பலி

கர்நாடகா மாநிலத்துக்கு சுற்றுலா சென்றுவிட்டு திரும்பியபோது பஞ்சராகி நின்ற வேன் மீது, மினி லாரி மோதிய விபத்தில் 7 பெண்கள் உடல் நசுங்கி பலியானார்கள். 10 பேர் காயமடைந்தனர்.

Update: 2023-09-11 19:27 GMT

இந்த கோரவிபத்து பற்றிய விவரம் வருமாறு:-

சுற்றுலா சென்றனர்

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டை அடுத்த திரு.வி.க. நகர் ஓணான்குட்டை பகுதியை சேர்ந்த 35 பேர் கர்நாடக மாநிலத்துக்கு சுற்றுலா செல்ல முடிவு செய்தனர். அதன்படி கடந்த 8-ந் தேதி இரண்டு வேன்களில் புறப்பட்டு சென்றனர். அங்கு தட்சிணகன்னடா மாவட்டம் பெல்தங்கடி அருகே உள்ள தர்மஸ்தலா கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சுற்றி பார்த்தனர்.

பின்னர் பெங்களூரு சென்று விட்டு அங்கிருந்து நேற்று முன்தினம் இரவு ஊருக்கு திரும்பினர். ஒரு வேனை பேரணாம்பட்டு பகுதியை சேர்ந்த சின்னத்துரை மகன் சதிஷ்குமார் (வயது 42) என்பவர் ஓட்டினார். அதில் 4 ஆண்கள், 15 பெண்கள், ஒரு குழந்தை என மொத்தம் 20 பேர் இருந்தனர்.

வேன் மீது மினி லாரி மோதல்

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அருகே உள்ள சண்டியூர் பகுதியில் கிருஷ்ணகிரி- வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று அதிகாலை 3 மணி அளவில் வந்தபோது வேன் திடீரென பஞ்சராகியது. உடனே டிரைவர் சாலையின் நடுவில் உள்ள தடுப்புச்சுவரின் ஓரமாக நிறுத்தினார். வேனில் இருந்த ஆண்கள் அனைவரும் அருகில் பஞ்சர் ஒட்டும் கடை இருக்கிறதா என பார்க்க சென்றுள்ளனர்.

பெண்கள் வேனில் இருந்து கீழே இறங்கி தேசிய நெடுஞ்சாலையில் நடுவே உள்ள 'சென்டர் மீடியன்' புல் தரையில் சிலரும், பஞ்சராகி நின்ற வேனின் முன்பகுதியில் ரோட்டில் சிலரும் அமர்ந்திருந்தனர்.

7 பெண்கள் உடல் நசுங்கி பலி

இந்த நேரத்தில் அந்த வழியாக கிருஷ்ணகிரி பகுதியில் இருந்து சென்னை நோக்கி வேகமாக வந்த மினி லாரி ஒன்று, திடீரென நின்று கொண்டிருந்த வேன் மீது பயங்கரமாக மோதியது. இதில் வேன் வேகமாக நகர்ந்து சென்று முன்னால் அமர்ந்திருந்த பெண்கள் மீது ஏறி இறங்கியது. வேன் மீது மோதிய மினி லாரி நிலை தடுமாறி சாலையின் நடுவில் சென்டர் மீடியனில் ஏறி அங்கு புல் தரையில் அமர்ந்திருந்த பெண்கள் மீது ஏறி இறங்கியது.

இதில் 7 பெண்கள் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். வேன் மற்றும் மினி லாரி டிரைவர் உள்பட 10 பேர் படுகாயமடைந்தனர்.

பெயர் விவரம்

விபத்தில் இறந்தவர்கள் மற்றும் காயம் அடைந்தவர்கள் பெயர் விவரம் வருமாறு:-

பேரணாம்பட்டு அருகே உள்ள ஓணான்குட்டை பகுதியை சேர்ந்த முனிசாமி மனைவி மீரா (வயது 50), திலீப்குமார் மனைவி தெய்வானை (32), பழனி மனைவி செல்வி என்கிற சேட்டம்மாள் (55), சண்முகம் மனைவி தேவகி (50), குப்பன் மனைவி சாவித்திரி (45), குப்புசாமி மனைவி கலாவதி (42), திரு.வி.க. நகர் பகுதியை சேர்ந்த ரஞ்சித் மனைவி கீதாஞ்சலி (வயது 32) ஆகியோர்.

மேலும் வேன் டிரைவர் சதீஷ்குமார், மினி லாரி டிரைவர் சென்னையை சேர்ந்த பரசுராமன் மகன் அருணாசலம் (34) மற்றும் சத்யா, வைஷ்ணவி, சியாமளா, தனஜெயன், சிவரூரி, ரவி, சண்முகம், பானுமதி ஆகிய 10 பேர் காயமடைந்தனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்ததும் திருப்பத்தூர் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு புஷ்பராஜ், வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் மலர் உள்பட போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இது குறித்து தகவல் அறிந்ததும் வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணனும் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு, விபத்து நடந்தது குறித்து கேட்டறிந்தார்.

மேலும் நாட்டறம்பள்ளி தீயணைப்பு நிலைய அலுவலர் ரமேஷ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

சோகத்தில் மூழ்கிய கிராமம்

விபத்தில் இறந்த பெண்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு மூன்று பேரின் உடல்களையும், திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு நான்கு பெண்களின் உடல்களையும் அனுப்பி வைத்தனர்.

அதேபோன்று விபத்தில் படுகாயமடைந்த வேன் டிரைவர் சதீஷ்குமார், மினி லாரி டிரைவர் அருணாசலம் ஆகிய இருவரும் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கும், சத்யா, வைஷ்ணவி, சியாமளா, தனஜெயன், சிவரூரி, ரவி ஆகியோர் நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சண்முகம் மற்றும் பானுமதி ஆகிய இருவரும் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்து குறித்து ரஞ்சித் குமார் கொடுத்த புகாரின் பேரில் நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் மலர், சப்- இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சுற்றுலா சென்று விட்டு திரும்பியபோது நடைபெற்ற இந்த கோர விபத்தில் ஒரே பகுதியை சேர்ந்த 7 பெண்கள் பலியான சம்பவம் அந்த கிராமத்தை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்