கோத்தகிரி அருகே அறுவடை செய்த பீட்ரூட்களை சுத்தம் செய்து விற்பனைக்கு அனுப்பும் பணி மும்முரம்
கோத்தகிரி பகுதியில் அறுவடை செய்த பீட்ரூட்டை கழுவி சுத்தம் செய்து, மூட்டைகளில் நிரப்பி மேட்டுப்பாளையம், ஊட்டி மற்றும் கோத்தகிரி காய்கறி மண்டிகளுக்கு விற்பனைக்காக அனுப்பும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
கோத்தகிரி
கோத்தகிரி பகுதியில் அறுவடை செய்த பீட்ரூட்டை கழுவி சுத்தம் செய்து, மூட்டைகளில் நிரப்பி மேட்டுப்பாளையம், ஊட்டி மற்றும் கோத்தகிரி காய்கறி மண்டிகளுக்கு விற்பனைக்காக அனுப்பும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
பீட்ரூட் அறுவடை
கோத்தகிரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தேயிலைக்கு அடுத்தபடியாக உருளைக்கிழங்கு, பீன்ஸ், முட்டைக்கோஸ், காலிபிளவர், முள்ளங்கி, பீட்ரூட், கேரட், பூண்டு உள்ளிட்ட மலைக்காய்கறிகள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. மேலும் புரூக்கோலி, சுகுனி, சல்லாரை போன்ற காய்கறிகளையும் பயிரிட்டு வருகின்றனர்.
தற்போது மலை காய்கறிகளின் கொள்முதல் விலை கணிசமாக உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளதுடன், அவர்களுக்கு கணிசமான லாபம் கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது பீட்ரூட் பயிரிட்டுள்ள விவசாயிகள் அதை அறுவடை செய்து கழுவி, கோத்தகிரி, ஊட்டி மற்றும் மேட்டுப்பாளையம் காய்கறி மண்டிகளுக்கு விற்பனைக்காக அனுப்பி வருகின்றனர்.
கிலோ ரூ.70
காய்கறி மண்டிகளில் பீட்ரூட் கொள்முதல் விலை கடந்த சில மாதங்களாக நிலையாக இருப்பதால், அதைப் பயிரிட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதுகுறித்து கூக்கல்தொரை சீகுளா ஹட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் தெரிவித்ததாவது:- தொழிலாளர்கள் பற்றாக்குறை, வனவிலங்குகள் தொல்லை, விதை மற்றும் இடுபொருட்களின் விலையேற்றம் உள்ளிட்ட பிரச்சினைகளை எதிர்கொண்டு வங்கிகளில் இருந்து கடன் பெற்று, காய்கறிகளை பயிரிட்டு வருகிறோம். தற்போது மலை காய்கறிகளின் கொள்முதல் விலை சற்று உயர்ந்து வருகிறது.
தற்போது காய்கறி மண்டிகளில் பீட்ரூட் கிலோ ஒன்றுக்கு 50 ரூபாய் முதல் 70 ரூபாய் வரை தரத்திற்கு தக்கவாறு கொள்முதல் செய்யபட்டு வருகிறது. மேலும் பீட்ரூட் கொள்முதல் விலை நிலையாக இருப்பதுடன், இந்த விலை போதுமானதாக உள்ளது. எனவே பீட்ரூட்டை அறுவடை செய்து விற்பனைக்காக அனுப்பி வருகிறோம் என்று தெரிவித்தார்.