பீடி மண்டி உரிமையாளர் வீட்டில் நகை, பணம் திருட்டு

காட்பாடியில் பீடி மண்டி உரிமையாளர் வீட்டில் திருடிய கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-05-23 17:44 GMT

காட்பாடியில் பீடி மண்டி உரிமையாளர் வீட்டில் திருடிய கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்தனர்.

பீடி மண்டி உரிமையாளர் வீட்டில் திருட்டு

வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா சேனூர் கிராமம் அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் டெல்லி. பீடி மண்டி உரிமையாளர். இவரது மனைவி கவுரி. இவர்கள் இருவரும் கடந்த 21-ந்தேதி ஜாப்ராபேட்டையில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக வீட்டை பூட்டி விட்டு சென்றனர்.

நிகழ்ச்சி முடிந்து இரவு 11 மணிக்கு மீண்டும் வீட்டிற்கு வந்தனர். வீட்டிற்குள் சென்று பார்த்த போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து 11 பவுன் நகைகள், ரூ.3.90 லட்சம் ரொக்கம் ஆகியவை திருட்டு போனது தெரியவந்தது.

போலீசில் புகார்

இந்த சம்பவம் குறித்து கவுரி விருதம்பட்டு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஆதர்ஷ் வழக்குப்பதிவு செய்தார். சம்பவ இடத்திற்கு போலீசார் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் கவுரியின் வீட்டின் அருகே நின்று கொண்டு இருந்ததாக பொதுமக்கள் தெரிவித்தனர். அந்த கல்லூரி மாணவரை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் நகை, பணத்தை திருடியதாக கல்லூரி மாணவர் ஒப்புக்கொண்டார்.

கல்லூரி மாணவர் கைது

அதைத்தொடர்ந்து போலீசார் மாணவரின் வீட்டுக்கு சென்று சோதனை செய்தனர். அப்போது மாட்டு கொட்டகையில் உள்ள பையில் பதுக்கி வைத்திருந்த நகை, பணத்தை பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து போலீசார் கல்லூரி மாணவரை கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்