நீதிக்கு வெற்றி தேடித்தரும் வக்கீல்களாக விளங்க வேண்டும்: மாணவர்களுக்கு முதல்-அமைச்சர் வேண்டுகோள்

நீதிக்கு வெற்றி தேடித்தரும் வக்கீல்களாக நீங்கள் விளங்க வேண்டும்' என தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக வெள்ளி விழாவில் மாணவர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.

Update: 2022-09-20 23:48 GMT

சென்னை,

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தின் வெள்ளி விழா சென்னை பெருங்குடியில் உள்ள பல்கலைக்கழக கலையரங்கில் நேற்று நடந்தது.

பல்கலைக்கழக துணைவேந்தர் சந்தோஷ்குமார் வரவேற்றார். விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு வெள்ளி விழா கல்வெட்டை ரிமோட் கன்ட்ரோல் மூலம் திறந்து வைத்தார்.

பின்னர் வெள்ளி விழா மலர் மற்றும் சட்ட புத்தகங்கள், ஆய்வு புத்தகங்களை மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அதனை பல்கலைக்கழக இணைவேந்தரும், சட்டத்துறை அமைச்சருமான எஸ்.ரகுபதி, ஐகோர்ட்டு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி என்.கிருபாகரன், அகில இந்திய பார் கவுன்சில் துணைத்தலைவர் எஸ்.பிரபாகரன், தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ் உள்ளிட்டோர் பெற்றுக்கொண்டனர்.

விழாவில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

தெற்காசியாவில் முதன் முதலாக...

1989-ம் ஆண்டு நூற்றாண்டு கண்ட சென்னை சட்டக்கல்லூரிக்கு, 'டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரி' என்று பெயர் சூட்டியவர் கருணாநிதி.

1997-ம் ஆண்டு கருணாநிதியால் சட்டக்கல்விக்காக தெற்காசியாவிலேயே முதன்முதலாக தமிழகத்தில் தான் சட்ட பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது.

இந்த பல்கலைக்கழகத்திற்கு தேவையான இடத்தை தேர்வு செய்வது சற்று கடினமாக இருந்தது. முதல்-அமைச்சராக கருணாநிதி இருந்தபோது அவருக்கு வசதியான இல்லம் வேண்டும் என அரசுத்துறை அதிகாரிகள் முடிவு செய்து, கிரீன்வேஸ் சாலையில் உள்ள பூம்பொழில் இல்லத்தில் பல வசதிகளை செய்து அந்த இடத்தை ஒதுக்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தார்கள்.

செயல்வடிவம்

அந்த சமயத்தில் தான் டாக்டர் அம்பேத்கர் பல்கலைக்கழகத்துக்கு இடம் தேடப்பட்டு வந்தது. அப்போது கருணாநிதி, தான் குடியேற இருந்த குடியேறுவதற்காக பரிந்துரை செய்யப்பட்ட பூம்பொழில் இல்லத்தை, டாக்டர் அம்பேத்கர் பல்கலைக்கழகம் அமைப்பதற்காக ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டார். தன்னலம் கருதாது பொதுநல நோக்கில் பல்கலைக்கழகம் செயல்பட வழிவகை செய்தவர் கருணாநிதி.

40 மாணவர்களைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த பல்கலைக்கழகம், தற்போது ஏறக்குறைய 4,500 மாணவர்களைக் கொண்டுள்ளது.

அனைத்து தரப்பினருக்கும் தரமான உயர்கல்வியை கொண்டு சேர்க்க வேண்டும் என்ற முனைப்பில் தான், தமிழக அரசு பல்வேறு சீரிய திட்டங்களை வகுத்து அதற்கு செயல்வடிவம் அளித்து வருகிறது.

பெருமிதம் அளிக்கிறது

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கிவரும் சீர்மிகு சட்டப்பள்ளியில் 70 சதவீதத்துக்கு மேல் மாணவிகளே சட்டம் பயின்று வருவதும், பல மாணவிகள் இங்கு சட்டம் பயின்று ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்று, அகில இந்திய அளவில் நிர்வாக பொறுப்புகளில் துணை நின்று பணியாற்றுவதும், நீதிபதிகளாக நீதி வழங்கி வருவதும் பெருமிதம் அளிக்கிறது.

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம் மென்மேலும் பொலிவுற்று பல சட்ட மாமேதைகளை உருவாக்கி சமூகத்திற்கு நன்மக்களை வழங்கக்கூடிய நற்பணியில் பல நூற்றாண்டுகள் சிறந்து செயல்பட வேண்டும்.

சட்டம் பயின்று வரும் மாணவர்களாகிய நீங்கள், உங்களது சட்ட அறிவை, வாதத்திறனை, ஏழை எளிய - ஒடுக்கப்பட்ட மக்களின் நீதிக்காக பயன்படுத்த வேண்டும்.

அடிப்படை உரிமை

இந்திய அரசியலமைப்பு சட்டம் உருவாக்கி கொடுத்துள்ள அடிப்படை உரிமைகளை பாதுகாக்கும் வக்கீல்களாக நீங்கள் திகழ வேண்டும்.

சட்டநீதியை மட்டுமல்ல, சமூகநீதியையும் நிலைநாட்டக்கூடியவர்களாக நீங்கள் விளங்க வேண்டும். மக்களுக்கு இன்றைய தேவை என்பது நீதி மட்டும்தான். அத்தகைய நீதியின் தூதுவர்களாக சட்டம் படிக்கும் நீங்கள் எதிர்காலத்தில் திகழ வேண்டும்.

சட்ட புத்தகங்களையும் தாண்டி, இந்த சமூகத்தையும் பாடமாக நீங்கள் படிக்க வேண்டும். நாட்டின் அரசியல் போராட்டமாக இருந்தாலும் - விடுதலை போராட்டமாக இருந்தாலும் - சமுதாய சீர்திருத்த இயக்கமாக இருந்தாலும் - அதில் முன்னின்று கடமையாற்றியவர்கள் வக்கீல்களாத்தான் இருக்கிறார்கள். இந்த படிப்பு என்பதே சட்ட அரசியல் - சமூகவியல் படிப்பாகத்தான் இருக்கிறது.

உங்களது கட்சிக்காரர்களுக்கு வெற்றி தேடித்தரும் வக்கீல்களாக மட்டுமில்லாமல் - நீதிக்கு வெற்றி தேடித்தரும் வக்கீல்களாக நீங்கள் விளங்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், செஞ்சி மஸ்தான், தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி., மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், சென்னை ஐகோர்ட்டு வக்கீல் சங்க தலைவர் மோகனகிருஷ்ணன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்