காதலி பெற்றோருடன் சென்றதால்வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
சிவகிரி அருகே வீட்டிற்கு அழைத்து வந்து தங்கவைத்த காதலி அவரது பெற்றோருடன் சென்றதால் விரக்தி அடைந்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.;
சிவகிரி:
சிவகிரி அருகே வீட்டிற்கு அழைத்து வந்து தங்கவைத்த காதலி அவரது பெற்றோருடன் சென்றதால் விரக்தி அடைந்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்பட்டதாவது:-
பெற்றோருடன் சென்ற காதலி
தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே உள்ள துரைச்சாமியாபுரம் இந்திரா காலனி பகுதியைச் சேர்ந்தவர் வாழவந்தான். இவரது மகன் கார்த்திக் (வயது 22). கூலித்தொழிலாளியான இவருக்கும், சங்கரன்கோவிலை சேர்ந்த ஒரு இளம்பெண்ணுக்கும் நட்பு ஏற்பட்டு 6 மாதமாக காதலித்து வந்தனர். சுமார் 3 மாதங்களுக்கு முன்பு அந்த பெண்ணை அவரது பெற்றோருக்கு தெரியாமல் கார்த்திக் அழைத்து வந்து தனது வீட்டில் தங்க வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே மகள் இருப்பதை தேடி கண்டுபிடித்து அந்த பெண்ணின் பெற்றோர் துரைச்சாமியாபுரத்துக்கு வந்தனர். அவரிடம் பெற்றோர் அழுது புலம்பியதை தொடர்ந்து மனம் உருகிய அந்த பெண் மனம் மாறி தனது பெற்றோருடன் சொந்த ஊருக்கு சென்று விட்டார்.
தற்கொலை
இதனால் விரக்தி அடைந்த கார்த்திக் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அவரது தந்தை வாழவந்தான், சிவகிரி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கார்த்திக் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிவகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
சப்-இன்ஸ்பெக்டர் சஜிவ் வழக்குப்பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சண்முகசுந்தரம் விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.