கோடை வெயில் அதிகமாக இருப்பதால்குழந்தைகள், முதியவர்களை கவனமுடன் பராமரிக்க வேண்டும்;கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வேண்டுகோள்

கோடை வெயில் அதிகமாக இருப்பதால் குழந்தைகள், முதியவர்களை கவனமுடன் பராமரிக்க வேண்டும் என்று கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2023-04-26 21:54 GMT

கோடை வெயில் அதிகமாக இருப்பதால் குழந்தைகள், முதியவர்களை கவனமுடன் பராமரிக்க வேண்டும் என்று கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

குடிநீர்

ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-

ஈரோடு மாவட்டத்தில் கோடை வெயில் அதிகமாக இருக்கும் என்றும், வெப்ப அலையின் தாக்கம் இருக்கலாம் என்றும் இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்து உள்ளது. அதற்கு பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. ஆனால் வெப்ப அலையின் தாக்கத்தில் இருந்து பாதுகாத்து கொள்ளலாம். பகல் 12 மணியில் இருந்து பிற்பகல் 3 மணி வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் அத்தியாவசிய தேவைகள் தவிர பொதுமக்கள் வெளியில் செல்வதை தவிர்க்கவும். அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும். வீட்டில் தயாரித்த நீர்மோர், லஸ்சி, புளித்த சோற்று நீர், எலுமிச்சை சாறு போன்ற பானங்களை பருகலாம்.

தவிர்க்க முடியாத காரணங்களுக்கு வீட்டில் இருந்து வெளியே செல்லும்போது உடன் குடிநீர் எடுத்து செல்வதுடன், தலையில் தொப்பி அணிந்தும், குடையை பிடித்தவாறும் செல்லலாம். அதிக வெயில் காரணமாக சோர்வு, உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு ஆஸ்பத்திரிகளை அணுகலாம்.

குழந்தைகள்

குழந்தைகளை கார் உள்ளிட்ட வாகனங்களில் தனியாக விட்டுச்செல்லக்கூடாது. அடைக்கப்பட்ட வாகனங்களில் வெப்பம் அதிகமாகி குழந்தைகள் உயிருக்கு ஆபத்தை விளைவிக்ககூடும். முதியவர்களுக்கு வெப்பத்தை தணிக்க ஈரமான துண்டு மூலமாக கழுத்து, கைகளில் துடைக்க வேண்டும். குளிர்ந்த நீரில் குளிக்கலாம். எனவே குழந்தைகள், முதியவர்களை கவனமுடன் பராமரிக்க வேண்டும். கால்நடைகளை நிழலான இடங்களில் கட்டி வைப்பதோடு, அருகில் போதுமான தண்ணீர் எப்போதும் வைத்திருக்க வேண்டும்.

பருவநிலை மாற்றங்களில் இந்த ஆண்டு கோடை வெயிலின் வெப்பம் தொடக்கத்திலேயே அதிகமாக உள்ளது. எனவே மாடி வீடுகளிலும், கூரை வீடுகளிலும் மின் கம்பிகள் உருகி எளிதில் தீ பிடிக்க வாய்ப்பு உள்ளது. விலை உயர்ந்த பொருட்கள் மற்றும் முக்கிய ஆவணங்களை பாதுகாப்பாக வைத்திருப்பது அவசியம். கியாஸ் சிலிண்டரை பாதுகாப்பாக பயன்படுத்திவிட்டு முறையாக அணைத்து வைக்க வேண்டும். கோடை காலம் முடியும் வரை பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கூறிஉள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்