அழகுநிலைய பெண்ணை கடத்தி சித்ரவதை

அழகுநிலைய பெண்ணை கடத்தி சித்ரவதை

Update: 2022-10-02 13:39 GMT

பல்லடம்

தொழிலில் பங்குதாரராக சேர்ப்பதாக கூறி ஏமாற்றி கடத்திச் சென்று அறையில் அடைத்து வைத்து சித்ரவதை செய்வதாக பெண் வெளியிட்டுள்ள கண்ணீர் வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

அழகு நிலையம்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே வடுகபாளையம் பகுதியை சேர்ந்தவர் சேகர். வெளியூரில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பிரவீனா (வயது 38). இவர் பல்லடம்- மங்கலம் ரோடு பகுதியில் அழகு நிலையம் (பியூட்டி பார்லர்) நடத்தி வந்தார்.

இந்த நிலையில் பிரவீனாவின் தாயார் மீனா பல்லடம் போலீசில் தனது மகளை காணவில்லை என்றும், அவளை கண்டுபிடித்து தருமாறும் புகார் கூறினார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து பிரவீனாவை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.

இந்த நிலையில் பிரவீனா பேசும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் பிரவீனா பேசியிருப்பதாவது:-

கடன் பெற்றனர்

எனது பியூட்டி பார்லருக்கு பல்லடம் வேலப்பகவுண்டன்பாளையம் பகுதியை சேர்ந்த சிவக்குமாரின் மனைவி தமிழ்ச்செல்வி அடிக்கடி வருவார். அந்த வகையில் எனக்கு அவருடன் பழக்கம் ஏற்பட்டது. அப்போது சிவக்குமார் டெக்ஸ்டைல்ஸ் தொழில் செய்து வருவதாகவும், தொழிலில் பங்குதாரர் ஆனால் விரைவில் நிறைய பணம் சம்பாதிக்கலாம் என்றும் தமிழ்செல்வி கூறினார். இதனால் அவரை நம்பி எனது வீட்டின் பத்திரத்தை கொடுத்தேன். அதனை வங்கியில் வைத்து ரூ.3 கோடி கடன் பெற்றார். ஆனால் என்னிடம் ரூ.10 லட்சம் தான் கடன் பெற்றதாக கூறினார். இந்த நிலையில் வங்கியில் வாங்கிய கடனை திருப்பி செலுத்தாததால் எனது சொத்தை ஏலம் விடுவதாக வங்கியில் இருந்து நோட்டீஸ் வந்தது.

இது குறித்து அவர்களிடம் கேட்டபோது, தொழில் விஷயமாக திருச்சி செல்வதாகவும், அங்கு சிலரிடம் பணம் வர வேண்டி உள்ளதால் அவர்களிடம் வாங்கி தருவதாகவும் கூறி என்னையும் அழைத்து சென்றனர். அங்கு திருச்சியில் ஒரு வீட்டில் என்னை அடைத்து வைத்து சில பத்திரங்களில் கையெழுத்து பெற்றுக் கொண்டனர். எனது செல்போனையும் பிடுங்கிக் கொண்டனர்.

எப்படியாவது காப்பாற்றுங்கள்

தினமும் என்னை சித்ரவதை செய்கின்றனர். என்னால் என் குடும்பத்துக்கும் அவப்பெயர் ஏற்பட்டு விட்டது. எப்படியாவது என்னை சிவக்குமாரிடம் இருந்து காப்பாற்றுங்கள்.

இவ்வாறு கண்ணீர் மல்க பேசி வெளியிட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை ஆய்வு செய்து பல்லடம் போலீசார் பிரவீனாவை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் திருச்சி பகுதியில் எங்கு அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார் என்ற விவரங்களை சேகரித்து வருகின்றனர். இது தொடர்பாக திருச்சி போலீசாரின் உதவியுடன் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்