இளம்பெண் அடித்து கொலை

ராமநாதபுரம் அருகே பெரியப்பாவை கொன்றதால் இளம்பெண் அடித்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது தம்பியை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-05-28 18:45 GMT

ராமநாதபுரம் அருகே பெரியப்பாவை கொன்றதால் இளம்பெண் அடித்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது தம்பியை போலீசார் கைது செய்தனர்.

எரித்துக்கொலை

ராமநாதபுரம் அருகே உள்ள ஆர்.காவனூர் ஆசாரி மடம் பகுதியை சேர்ந்தவர் ரவி (வயது 53). இவரின் மனைவி பாக்கியம் (51). இவர்களுக்கு பவித்ரா (24) என்ற மகள் உள்ளார். இவருக்கும், உச்சிப்புளியை சேர்ந்த முத்துக்குமார் என்பவருக்கும் திருமணமாகி கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து பவித்ரா தாய் வீட்டிற்கு வந்து விட்டார். தாயுடன் சேர்ந்து பவித்ரா செங்கல் சூளைக்கு வேலைக்கு சென்று வந்தார். அங்கு லோடு ஏற்ற வந்த இடையர்வலசையை சேர்ந்த முருகானந்தம் (42) என்ற லாரி டிரைவருடன் பவித்ராவிற்கு பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனை பாக்கியம் கண்டும் காணாமல் இருந்தாராம்.

இதுகுறித்து அறிந்த ரவி தனது மகளையும், மனைவியையும் கண்டித்தார். இதனால் ஆத்திரமடைந்த தாயும், மகளும் சேர்ந்து ரவியை தீர்த்து கட்ட முடிவு செய்தனர். கடந்த கடந்த ஆண்டு மார்ச் 8-ந் தேதி குடிபோதையில் வீட்டிற்கு வந்து படுத்த ரவியை பவித்ராவும், பாக்கியமும் சேர்ந்து பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்துக்கொன்றனர். மேலும் அவர். குடிபோதையில் தீ வைத்து கொண்டதாக நாடகம் ஆடினர். இதுகுறித்து ராமநாதபுரம் பஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

ஜாமீனில் வந்தார்

விசாரணையில் அந்த பகுதியை சேர்ந்த சிறுவன் ஒருவன், பவித்ரா பெட்ரோல் பங்கில் இருந்து பாட்டிலில் பெட்ரோல் வாங்கி வந்ததாக தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து பவித்ராவை அழைத்து விசாரித்த போது கள்ளக்காதலன் முருகானந்தத்துடன் சேர்ந்து ரவியை கொலை செய்தது தெரியவந்தது. பின்னர் பாக்கியம், பவித்ரா, லாரி டிரைவர் முருகானந்தம் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ஜாமீனில் பாக்கியமும், பவித்ராவும் வெளியே வந்தனர். தனது பெரியப்பாவை கொன்றதால் பாக்கியம் மற்றும் பவித்ரா மீதும் ரவியின் தம்பி முருகேசனின் மகனான மணிகண்டன் (23) என்பவர் ஆத்திரத்தில் இருந்தார்.

அடித்துக்கொலை

இந்நிலையில் நேற்று மாலை பவித்ரா வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மணிகண்டன், பவித்ராவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரம் அடைந்த மணிகண்டன் தான் கையில் வைத்திருந்த இரும்பு கம்பியால் அக்காள் பவித்ராவை சரமாரியாக தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த பவித்ரா ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் அங்கு திரண்டனர். இதனால் மணிகண்டன் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். அவரை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர். இதையடுத்து ராமநாதபுரம் பஜார் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மணிகண்டனை கைது செய்தனர். மேலும் பவித்ராவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Tags:    

மேலும் செய்திகள்