மூதாட்டி அடித்துக்கொலை

பென்னாகரம் அருகே சொத்துக்காக மூதாட்டி அடித்துக்கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-07-03 14:13 GMT

பென்னாகரம்:

பென்னாகரம் அருகே சொத்துக்காக மூதாட்டி அடித்துக்கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படடதாவது:-

2 மனைவிகள்

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே ஜக்கம்பட்டி மேல் கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன், இவருக்கு 2 மனைவிகள். முதல் மனைவி குப்பம்மாள் (வயது 80). 2-வது மனைவி செண்பா. முதல் மனைவிக்கு குழந்தை இல்லாததால் லட்சுமணன் குப்பம்மாளின் தங்கை செண்பாவை 2-வதாக திருமணம் செய்து கொண்டார்.

இவருக்கு முனுசாமி(48) என்ற மகனும், 4 மகள்களும் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. லட்சுமணனுக்கு 10 ஏக்கர் நிலம் உள்ளது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு லட்சுமணன் இறந்து விட்டார். இதையடுத்து நிலத்தை அக்காள், தங்கைகள் பாகப்பிரிவினை செய்து கொண்டனர்.

அடித்துக்கொலையா?

இந்த நிலையில் குப்பம்மாளின் நிலத்தை செண்பாவின் மகன் முனுசாமி மிரட்டி எழுதி வாங்கி கொண்டதாக தெரிகிறது. இதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனிடையே உடல்நலக்குறைவால் குப்பம்மாள் படுக்கையில் ஓய்வு எடுத்து வந்தார். சம்பவத்தன்று வீட்டில் உள்ள அனைவரும் வேலைக்கு சென்று விட்டனர். மூதாட்டி குப்பம்மாளுடன் முனுசாமி வீட்டில் இருந்தார்.

இந்த நிலையில் குப்பம்மாள் கட்டிலில் பலத்த காயத்துடன் இறந்து கிடந்தார். மூதாட்டியின் உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் இருந்தன. இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் பென்னாகரம் போலீசார் விரைந்து வந்து குப்பம்மாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் விசாரணை

சொத்துக்காக மூதாட்டி அடித்துக்கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் துரை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று முனுசாமி மட்டுமே வீட்டில் இருந்த நிலையில் அவர்தான் மூதாட்டியை கொலை செய்தாரா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்