ஊருக்குள் புகுந்த கரடிகள்.. வீட்டு வளாகத்தில் சுற்றித்திரிந்ததால் மக்கள் அச்சம்
கரடிகள் வீட்டு வளாகத்தில் சுற்றித்திரிந்த காட்சி, வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவானது.
நெல்லை:
நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலையில் யானை, புலி, சிறுத்தை, கரடி, மிளா, மான், காட்டெருமை உள்பட ஏராளமான வன விலங்குகள் உள்ளன. இவை அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறி அடிவாரத்தில் உள்ள விளைநிலங்களுக்குள் புகுந்து சேதப்படுத்துவதோடு, கால்நடைகள் மற்றும் பொதுமக்களை தாக்கவும் செய்கின்றன.
இந்தநிலையில் விக்கிரமசிங்கபுரம் கோட்டைவிளைபட்டி வடக்கு தெருவை சேர்ந்த வைகுண்டராமன் என்பவருடைய வீட்டின் வளாகத்துக்குள் நேற்று முன்தினம் நள்ளிரவில் 2 கரடிகள் புகுந்தன. அந்த கரடிகள் அங்கும் இங்குமாக ஜோடியாக சுற்றித்திரிந்தன.
இந்த காட்சி அவரது வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவானது. தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கரடிகள் வீட்டு வளாகத்திற்குள் வந்த சம்பவம் அப்பகுதியினரிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.