புயலை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
மின்சார விபத்துகள் ஏற்படாத வகையில் மின்சார வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.;
சென்னை,
வடகிழக்கு பருவமழை மற்றும் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து 12 கடலோர மாவட்ட கலெக்டர்களுடன் காணொளி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் பாதிப்புகளை சரிசெய்தல், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. மேலும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
ஆலோசனை கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
புயலால் பாதிக்கப்படும் மாவட்டங்களில் பல்துறை மண்டலக் குழுக்களை அமைக்க வேண்டும். புயலை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். மழைநீர் தேங்காதவாறு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு எச்சரிக்கை வழங்கி நிவாரண முகாம்களில் தங்க வைக்க வேண்டும். முகாம்களில் தங்கவைக்கப்படும் மக்களுக்கு உணவு, குடிநீர் வழங்க வேண்டும்.
மழையின்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வண்ணம் போக்குவரத்து காவலர்கள் செயல்பட வேண்டும். போக்குவரத்து காவலர்களை அதிகளவில் பணியில் ஈடுபடுத்தி போக்குவரத்து நெரிசலை விரைந்து சரி செய்ய வேண்டும்
புயல் எச்சரிக்கையை தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் சமையல் கூடங்களை தயார் நிலையில் வைக்க வேண்டும். அரசு மருத்துவமனைகளில் அவசர சிகிச்சை பிரிவு 24 மணி நேரமும் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும். மழைக்காலத்தில் அனைத்து துறையினரும் இணைந்து செயல்பட வேண்டும்.
மழைக் காலங்களில் மின்சார விபத்துகள் ஏற்படாத வகையில் மின்சார வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும். புயலால் சாலைகளில் விழும் மரங்களை உடனடியாக அப்புறப்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட அமைச்சர்கள் தலைமைச் செயலாளரிடம் உதவிகளை பெற்றுக் கொள்ளலாம். அனைத்து உதவிகளையும் செய்ய தமிழக அரசு தயாராக உள்ளது. புயலால் ஏற்படும் தாக்கத்தை திறம்பட எதிர்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.