பி.பி.சி. அலுவலக சோதனை: பத்திரிக்கைச் சுதந்திரத்திற்கு வெளிப்படையான மிரட்டல் - சீமான் கண்டனம்

பி.பி.சி. அலுவலக சோதனை என்பது பத்திரிக்கைச் சுதந்திரத்திற்கு விடப்பட்டிருக்கும் வெளிப்படையான மிரட்டல் என்று சீமான் கூறியுள்ளார்.

Update: 2023-02-15 10:54 GMT

சென்னை,

பி.பி.சி. ஊடகத்தின் அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியிருப்பது என்பது பத்திரிக்கைச் சுதந்திரத்திற்கு விடப்பட்டிருக்கும் வெளிப்படையான மிரட்டலாகும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மும்பை மற்றும் டெல்லியிலுள்ள பி.பி.சி. ஊடகத்தின் அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியிருப்பது அப்பட்டமான அதிகார முறைகேடாகும். குஜராத்தில் மோடி அரசு நிகழ்த்திய இனப்படுகொலை குறித்தான ஆவணப்படத்தை வெளியிட்டதற்கு எதிர்வினையாகப் பழிவாங்கும் போக்கோடு நிகழ்த்தப்பட்டிருக்கும் இந்நடவடிக்கை என்பது பத்திரிக்கைச் சுதந்திரத்திற்கு விடப்பட்டிருக்கும் வெளிப்படையான மிரட்டலாகும்.

உலகப்புகழ் பெற்ற ஊடகமான பி.பி.சி.யின் ஆவணப்படத்தை நேர்மையாக எதிர்கொள்ள திராணியற்று, எதேச்சதிகாரப்போக்கோடு அவற்றிற்குத் தடைவிதித்த ஒன்றிய அரசு, தற்போது அதன் நீட்சியாக வருமானவரித்துறையினரை ஏவிவிட்டு, தனது அதிகாரப்பலத்தைக் காண்பிக்க முற்படுவது வெட்கக்கேடானது.

வருமானவரித்துறை, மத்தியப் புலனாய்வுத்துறை, மத்திய அமலாக்கத்துறை என தன்னாட்சி அமைப்புகள் யாவற்றையும் கையகப்படுத்தி, அதன்மூலம் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்களையும், சனநாயகவாதிகளையும், சமூகச்செயற்பாட்டாளர்களையும், மண்ணுரிமைப் போராளிகளையும், நேர்மையான ஊடகங்களையும் அச்சுறுத்தி வரும் ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசின் கொடுங்கோல் நடவடிக்கைகளுக்கு எனது வன்மையான கண்டனத்தையும், எதிர்ப்புணர்வையும் பதிவுசெய்கிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்