வெண்ணந்தூர் ஒன்றியத்துக்குட்பட்ட 14 ஊராட்சிகளுக்கு ரூ.35 லட்சத்தில் பேட்டரி வாகனம்-அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார்

Update: 2023-04-24 18:45 GMT

வெண்ணந்தூர்:

வெண்ணந்தூர் ஊராட்சிக்குட்பட்ட 14 ஊராட்சிகளுக்கு ரூ.35 லட்சத்தில் குப்பை சேகரிக்க பேட்டரி வாகனங்களை அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார்.

பேட்டரி வாகனங்கள்

ராசிபுரம் தாலுகா வெண்ணந்தூர் ஒன்றியத்துக்குட்பட்ட கட்டணாச்சம்பட்டி, தேங்கல்பாளையம், தொட்டியவலசு, கல்லங்குளம், ஓ.சவுதாபுரம், நடுப்பட்டி, குட்டலாடம்பட்டி, மூலக்காடு, பல்லவநாயக்கன்பட்டி, ஆர்.புதுப்பாளையம், நெ.3.கொமாரபாளையம், ஆலாம்பட்டி, மதியம்பட்டி, பொன்பரப்பிபட்டி ஆகிய 14 ஊராட்சிகளில் தூய்மை பணிகளை மேற்கொள்ள ரூ.35 லட்சத்தில் குப்பை சேகரிக்கும் 14 பேட்டரி வாகனங்கள் வழங்கும் விழா வெண்ணந்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடந்தது.

விழாவில் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஸ்குமார் முன்னிலை வகித்தார். தமிழக வனத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் புதிய பேட்டரி வாகனங்களை வழங்கி, அவற்றை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

விழாவில் அவர் பேசியதாவது:-

நீண்ட கால கோரிக்கை

தி.மு.க. ஆட்சியில் நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்ட பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக ராசிபுரம் அரசு தலைமை ஆஸ்பத்திரி மேம்பாடு, போதமலை கிராமத்திற்கு சாலை அமைத்தல், நாரைக்கிணறு பகுதி மக்களுக்கு பட்டா வழங்குதல் உள்ளிட்ட நீண்ட கால கோரிக்கைகளுக்கு தற்போது தீர்வு காணப்பட்டு வருகிறது.

வெண்ணந்தூர் ஒன்றியத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 2021-2022-ம் ஆண்டில் ரூ.2 கோடியே 34 லட்சத்தில் 39 பணிகளும், 2022-2023-ம் ஆண்டில் ரூ.1 கோடியே 87 லட்சத்தில் 44 பணிகளும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 2021-2022-ம் ஆண்டில் ரூ.2 கோடியே 4 லட்சத்தில் 38 பணிகளும், 2022-2023-ம் ஆண்டில் ரூ.1 கோடியே 86 லட்சத்தில் 31 பணிகளும், முதல்-அமைச்சர் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.10 கோடியில் 13 சாலை பணிகளும் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் பேசினார்.

சுழல் நிதி

தொடர்ந்து அத்தனூர் வன விரிவாக்க மையத்தில் தமிழ்நாடு வனக்காப்பு திட்டத்தின் கீழ் கிராம வனக்குழுவை சேர்ந்த 38 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.3 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பிலான சுழல் நிதி கடனுதவிகளை அமைச்சர் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சிகளில் மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம், வெண்ணந்தூர் ஒன்றிய குழு தலைவர் தங்கம்மாள், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் துரைசாமி, அட்மா குழு தலைவர் துரைசாமி, மின்னக்கல் ஊராட்சி மன்ற தலைவர் நிர்மலா, வெண்ணந்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அசோக்குமார், பிரபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்