வாடகைக்கு விடுவதற்கு கொண்டு வந்த பேட்டரி ஸ்கூட்டர்கள்

கொடைக்கானலில், வாடகைக்கு விடுவதற்கு கொண்டு வந்த பேட்டரி ஸ்கூட்டர்கள் சுற்றுலா வாகன ஓட்டுநர்களின் எதிர்ப்பால் திருப்பி அனுப்பப்பட்டன.

Update: 2022-06-15 16:46 GMT

'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளை நம்பி சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகன ஓட்டுனர்கள் வாழ்க்கை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக சுற்றுலா பயணிகள் வருகை இல்லாமல் உள்ளூர் சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் மிகவும் சிரமப்பட்டனர். இந்த ஆண்டு சுற்றுலா பயணிகளின் வருகையால் வாகன ஓட்டுனர்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர்.

இதனிடையே நேற்று காலை மதுரையை சேர்ந்த தனியார் நிறுவனம் சார்பில் பேட்டரியால் இயங்கும் 50 ஸ்கூட்டர்களை சுற்றுலா பயணிகளுக்கு வாடகைக்கு விடுவதற்காக கொடைக்கானலுக்கு லாரி மூலம் கொண்டு வரப்பட்டது. அவர்கள் நட்சத்திர ஏரிக்கு அருகே உள்ள கலையரங்கம் பகுதியில் லாரியை நிறுத்தி பேட்டரி ஸ்கூட்டர்களை இறக்கும் பணியில் ஈடுபட்டனர். இதையறிந்த உள்ளூர் சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் அங்கு திரண்டு வந்து எதிர்ப்பு தெரிவித்து முற்றுகையிட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த ெகாடைக்கானல் போலீசார் நேரில் வந்து தனியார் நிறுவன ஊழியர்களிடமும், வாகன ஓட்டுனர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேட்டரி வாகனத்தால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கும், அடிக்கடி தீப்பிடித்து எரிவதால் சுற்றுலா பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்று வாகன ஓட்டுனர்கள், உரிமையாளர்கள் தெரிவித்தனர். எனவே இனி வரும் காலங்களில் இதுபோல வாடகை பேட்டரி வாகனங்களுக்கு அரசு தடை விதிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து அந்த பேட்டரி ஸ்கூட்டர்களை மீண்டும் மதுரைக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்