சமையற் கூடங்களில் அடிப்படை வசதிகளை உறுதிப்படுத்த வேண்டும்

முதல்-அமைச்சரின் காலை உணவு திட்ட சமையற்கூடங்களில் அடிப்படை வசதிகளை அதிகாரிகள் உறுதிப்படுத்த கலெக்டர் வளர்மதி உத்தரவிட்டுள்ளார்.

Update: 2023-08-23 19:11 GMT

ஆய்வு கூட்டம்

ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் இயங்கி வரும் அரசு தொடக்கப் பள்ளிகளில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தின் செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கி பேசினார். அவர் பேசியதாவது:-

உறுதிப்படுத்த வேண்டும்

அரசு தொடக்கப் பள்ளிகளில் பயிலும் மாணவ- மாணவிகளுக்கான காலை உணவுத் திட்டத்தை நாளை (வெள்ளிக்கிழமை) முதல்-அமைச்சர் விரிவாக்கம் செய்து தொடங்கி வைக்கிறார். இத்திட்டத்தின் கீழ், புதிதாக கட்டப்பட்டுள்ள சமையற் கூடங்களில் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு உணவுகளை சமைக்க தேவையான பாத்திரங்கள், மளிகை பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் தேவையான அளவு இருப்பில் உள்ளதா? என்பதையும், குடிநீர் வசதி, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தும், இதர தேவைகள் ஏதேனும் உள்ளதா? என்பது குறித்து நகராட்சி ஆணையர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டு உறுதிப்படுத்த வேண்டும்.

சமையற்கூடங்களில் சமைத்த உணவுகளை வாகனங்கள் மூலம் பள்ளிகளுக்கு கொண்டு செல்லும் போது எவ்வித இடையூறுமின்றி பாதுகாப்புடன் உரிய நேரத்தில் கொண்டு செல்வதை உறுதிப்படுத்த வேண்டும். உணவுகளை பாதுகாப்பாக பெற்று பள்ளி மாணவ -மாணவிகளுக்கு வழங்கிட பள்ளி கல்வித்துறை சார்பாக அந்தந்த பள்ளிகளில் ஒரு பொறுப்பாசிரியரை நியமனம் செய்திட வேண்டும்.

சிறப்பாக

அரசு தொடக்கப் பள்ளி மாணவ- மாணவிகளின் இடைநிற்றலை குறைத்து கிராமப்புற பகுதிகளில் உள்ள குழந்தைகள் அவசியம் கல்விபெற வேண்டும் என்கிற உயரிய நோக்கத்தில் முதல்-அமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்ட இந்த திட்டம் எவ்வித இடையூறும் இன்றி சிறப்பாக செயல்படுத்தப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் பேரூராட்சிகள் உதவி இயக்குனர் கணேசன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) முரளி, நகராட்சி ஆணையாளர்கள் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்