மாவட்டம் முழுவதும்36 அனுமதியற்ற மதுகூடங்களுக்கு 'சீல்'
நாமக்கல் மாவட்டத்தில் 36 அனுமதியற்ற மதுகூடங்களுக்கு பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டு இருப்பதாக கலெக்டர் உமா தெரிவித்து உள்ளார்.
ஒருங்கிணைப்பு கூட்டம்
கள்ளச்சாராயம் மற்றும் போதைப்பொருட்கள் தடுப்பு சம்பந்தமாக, மாவட்ட கலெக்டர் தலைமையில் மாவட்ட அளவில் ஒவ்வொரு திங்கட்கிழமையும், ஒருங்கிணைப்பு கூட்டம் நடத்திட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.
அதன் அடிப்படையில் நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், கள்ளச்சாராயம் மற்றும் போதைப்பொருட்கள் தடுப்பு சம்பந்தமாக, வாராந்திர மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டம் கலெக்டர் உமா தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் வருவாய்த்துறை, காவல்துறை, டாஸ்மாக், வனத்துறை, கலால்துறை, சுகாதாரத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். இதில் கள்ளச்சாராயம் ஒழிப்பு தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்களிடம் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் விவரங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
பின்னர் கலெக்டர் உமா பேசும்போது கூறியதாவது:-
நாமக்கல் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் மற்றும் சட்ட விரோத மதுபானம் விற்பனையில் ஈடுபடுபவர்களின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் தணிக்கையின்போது அனுமதியற்ற மதுக்கூடங்கள் நடைபெறுவதை கண்டறியவும், மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதை கண்டறியவும், கள்ளச்சாராயம் மற்றும் வெளிமாநில மதுவகைகள் எதுவும் விற்பனை செய்யப்படுகிறதா? எனவும், சாலையோர கடைகள் மற்றும் தாபாக்களில் மதுபானங்களை கள்ளத்தனமாக விற்பனை செய்வதை கண்டறிய ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
பணிஇடை நீக்கம்
மேலும் மதுபானங்களை கூடுதல் விலை வைத்து விற்பனை செய்த கொக்கராயன்பேட்டை, கரிச்சிப்பாளையம், நாமக்கல், பவித்திரம், நாமகிரிப்பேட்டை, மொளசி, நெம்பர்-3 குமாரபாளையம், நாமகிரிப்பேட்டை மதுபான கடை பணியாளர்களுக்கு டாஸ்மாக் நிறுவன விதிகளின்படி ரூ.70 ஆயிரத்து 800 அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. ரூ.10-க்கு மேல் அதிக விலை வைத்து விற்பனை செய்த உதவி விற்பனையாளர் ஆனந்தன் மற்றும் விற்பனையாளர் சுரேஷ்குமார் ஆகியோர் விற்பனை குறைவாக உள்ள கடைகளுக்கு பணியிடமாறுதல் செய்யப்பட்டு உள்ளனர்.
வாடிக்கையாளரிடமிருந்து கூடுதல் விலை வைத்து விற்பனை செய்ததாகவும், சமூக வலைதளங்களில் கடைகளை பற்றி புகார் வரப்பெற்றதை தொடர்ந்து மொளசி டாஸ்மாக் கடையில் பணிபுரிந்து வரும் விற்பனையாளர் மாணிக்கம் என்பவரை தற்காலிகமாக பணிஇடைநீக்கம் செய்து உத்தரவிடப்பட்டு உள்ளது.
மதுக்கூடத்தில் காலை நேரங்களில் கள்ளத்தனமாக மதுபானங்களை விற்பனை செய்ததை கண்டறிந்து, அதனை கண்காணிக்க தவறிய மேற்பார்வையாளர் வெங்கடாசலம் விற்பனை குறைவான கடைக்கு பணியிடமாறுதல் செய்யப்பட்டு உள்ளார்.
36 மதுகூடங்களுக்கு சீல்
கடையின் வேலை நேரமான மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே மதுபான கடைகள் மற்றும் மதுக்கூடங்கள் இயங்கி வருகிறதா? எனவும், காலை நேரங்களில் அனுமதியின்றி மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என்பதை கண்காணிக்க வேண்டும். மேலும் மதுபான கடைக்கு அருகில் 36 அனுமதியற்ற மதுக்கூடங்கள், பெட்டிக்கடைகள் மற்றும் தள்ளு வண்டிகள் போன்ற 18 இனங்கள் கண்டறிப்பட்டு, பூட்டி சீலிடப்பட்டு உள்ளது. அதில் மதுவகைகள் விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக 17 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.
சட்ட விரோதமாக மதுபானங்கள் விற்பனை செய்யும் நபர்கள் மீது புகார்கள் அளிக்க மாவட்ட மது விலக்கு அமலாக்கப்பிரிவு, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கட்டுபாட்டில் செயல்படும் 88383 52334 என்ற செல்போன் எண்ணிற்கு நேரடியாகவும், வாட்ஸ்-அப் மூலமாகவும் தங்களது புகார்களை தெரிவிக்க பொதுமக்களை கேட்டுக் கொள்ளப்பட்டதன் அடிப்படையில் இதுவரை 11 புகார்கள் பெற்றப்பட்டு, இதில் 8 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இக்கூட்டத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு (மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு) ராஜூ, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சிவசுப்பிரமணியன், திருச்செங்கோடு உதவி கலெக்டர் கவுசல்யா, மாவட்ட மேலாளர் (டாஸ்மாக்) கமலக்கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.