விழுப்புரம்- கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் அனுமதியின்றி செயல்பட்ட 21 மதுபான கூடங்கள் பூட்டி சீல் வைப்பு அதிகாரிகள் நடவடிக்கை
விழுப்புரம்- கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் அனுமதியின்றி செயல்பட்ட 21 மதுபான கூடங்களை அதிகாரிகள் பூட்டி சீல்வைத்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
புகார்
விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த மாவட்டத்தில் 225 டாஸ்மாக் மதுபான கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த டாஸ்மாக் கடைகளையொட்டி கடைகளுக்கு அருகிலேயே அனுமதியில்லாமல் மதுபான கூடங்களும் நடத்தப்படுவதாக டாஸ்மாக் நிர்வாகத்திற்கு பல்வேறு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இந்த மதுபான கூடங்களால் அரசுக்கு வருவாய் இழப்பும் ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து அனுமதியின்றி செயல்படும் மதுபான கூடங்கள் மீது நடவடிக்கை எடுக்க டாஸ்மாக் மேலாண் இயக்குனர் மற்றும் மண்டல மேலாளர் உத்தரவிட்டனர்.
21 மதுபான கூடங்களுக்கு சீல்வைப்பு
அதன் அடிப்படையில் கடந்த சில நாட்களாக கரூர், பெரம்பலூர் மாவட்ட டாஸ்மாக் மேலாளர்கள் அடங்கிய குழுவினர், விழுப்புரம்- கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு அருகில் செயல்படும் மதுபான கூடங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.
இந்த சோதனையின்போது 2 மாவட்டங்களிலும் அனுமதியின்றி 21 மதுபான கூடங்கள் செயல்பட்டது கண்டறியப்பட்டது. இதையடுத்து அந்த 21 மதுபான கூடங்களையும் அதிகாரிகள், பூட்டி சீல் வைத்தனர். அதோடு மதுபான கூடத்தை நடத்தியவர்கள் மீது அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து, இந்த சோதனை நடத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.