உத்தமபாளையம் போலீஸ் நிலையத்துக்குள் புகுந்து போலீஸ்காரர் மீது சரமாரி தாக்குதல்

உத்தமபாளையத்தில் போலீஸ் நிலையத்துக்குள் புகுந்து போலீஸ்காரரை பொதுமக்கள் சரமாரியாக தாக்கினர்.;

Update: 2023-07-12 21:00 GMT

உத்தமபாளையத்தில் போலீஸ் நிலையத்துக்குள் புகுந்து போலீஸ்காரரை பொதுமக்கள் சரமாரியாக தாக்கினர்.

கடன் பெற்று மோசடி

தேனி மாவட்டம் உத்தமபாளையம் புள்ளிக்கார தெருவை சேர்ந்தவர் முகமது பாசித் (வயது 49). வெளிநாட்டில் வேலை செய்து வந்த இவர், கடந்த சில ஆண்டுகளாக உத்தமபாளையத்தில் விவசாயம் செய்து வருகிறார். முகமது பாசித், உத்தமபாளையம் களிமேட்டுப்பட்டி, பாதர்கான்பாளையம், தேரடிதெரு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் சில தனியார் நிதி நிறுவனங்களில் தனது தொழில் தேவைக்காக கடன் வாங்கினார். அந்த வகையில் ரூ.2 கோடிக்கு மேல் அவர் கடன் பெற்றதாக கூறப்படுகிறது. ஆனால் அவர் வாங்கிய கடனை திரும்ப கொடுக்காமல் இழுத்தடித்து வந்தார்.

இதனால் கடன் கொடுத்தவர்கள், நிதி நிறுவனத்தினர் தங்களது பணத்தை திரும்ப கேட்டுள்ளனர். அப்போது கடனை திரும்ப செலுத்த முடியாமல் தவித்த முகமது பாசித் ஒருகட்டத்தில், தான் கடன் பெற்ற 50-க்கும் மேற்பட்டவர்களுக்கு தனது வக்கீல்கள் மூலம் மஞ்சள் நோட்டீஸ் அனுப்பினார். இந்த நோட்டீசை பார்த்த கடன் கொடுத்த பொதுமக்கள், தங்களை மோசடி செய்துவிட்டதாக ஆத்திரமடைந்தனர். உடனே அவர்கள் முகமதுபாசித் வீட்டிற்கு நேற்று முன்தினம் திரண்டு சென்றனர். ஆனால் அங்கு அவர் இல்லை.

போலீஸ்காரர் மீது தாக்குதல்

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு உத்தமபாளையம் போலீஸ் நிலையத்துக்கு முகமது பாசித் தனது வக்கீல்களுடன் சென்றார். அங்கு போலீசாரிடம் மஞ்சள் நோட்டீஸ் வழங்கிய அவர், தனக்கு பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தார். இதுகுறித்து அறிந்ததும் கடன் கொடுத்த பொதுமக்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் என 100-க்கும் மேற்பட்டோர் போலீஸ் நிலையத்துக்கு திரண்டு வந்தனர்.

அப்போது அவர்கள் முகமதுபாசித்தை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போலீஸ் நிலையம் முன்பு போராட்டம் நடத்தினர். இதையடுத்து அங்கு பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் விஜய் ஆனந்த் மற்றும் போலீசார் பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பு ஏற்பட்டது.

இதற்கிடையே சிலர் போலீஸ் நிலையத்துக்குள் புகுந்து முகமதுபாசித் அமர்ந்திருந்த இடத்தை நோக்கி ஓடினர். இதை பார்த்த போலீஸ்காரர் நிஜாமுதீன், அவர்களை தடுத்து நிறுத்தினார். இதில், ஆத்திரமடைந்த அவர்கள் போலீஸ்காரரை தாக்கினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

8 பேர் மீது வழக்கு

இதுகுறித்து தகவல் அறிந்ததும் உத்தமபாளையம் உதவி போலீஸ் சூப்பிரண்டு மதுகுமாரி தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார், உத்தமபாளையம் போலீஸ் நிலையத்தில் குவிக்கப்பட்டனர். பின்னர் அங்கு போராட்டம் நடத்திய பொதுமக்களை கலைந்து செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தினர். ஆனால் அவர்கள் அங்கிருந்து கலைந்துபோக மறுத்து அங்கேயே நின்றனர்.

இதையடுத்து உதவி போலீஸ் சூப்பிரண்டு மதுகுமாரி, பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர், இந்த விஷயத்தில் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

பின்னர் போலீஸ்காரரை தாக்கியதாக உத்தமபாளையத்தை சேர்ந்த சதாம் உசேன், முகமது இப்ராகிம், சையது இப்ராகிம், சாய்னா, ரம்ஜான், முகமது பாத்திமா உள்பட 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்