வைகை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்படுமா?; கனவு திட்டத்துடன் காத்திருக்கும் விவசாயிகள்
தேனி அருகே பள்ளப்பட்டி பகுதியில் 1,000 ஹெக்டேர் நிலங்கள் பாசனம் பெறும் வகையில் வைகை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணி எப்போது தொடங்கும் என விவசாயிகள் காத்திருக்கின்றனர்.
தேனி அருகே அரண்மனைப்புதூர் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமமாக பள்ளப்பட்டி அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 3 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். இந்த கிராமத்துக்கும், குன்னூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கும் இடையே வைகை ஆறு செல்கிறது. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை வைகை ஆற்றில் ஆண்டுக்கு 8 முதல் 10 மாதங்கள் வரை நீரோட்டம் இருந்தது.
தடுப்பணை தேவை
மூலவைகையின் மழை ஆதாரமாக இருந்த மேகமலை, வருசநாடு மலைப்பகுதிகளில் இயற்கை வளங்கள் பறிபோனதன் விளைவாக ஆற்றில் நீரோட்டம் குறைந்தது. பலத்த மழை பெய்யும் போது ஆற்றில் நீரோட்டம் இருப்பதும், பருவமழைக்காலம் முடிந்த ஓரிரு மாதங்களில் நீர்வரத்து முற்றிலும் நின்று விடுவதும் கடந்த 20 ஆண்டுகால நிகழ்வாக உள்ளது. இதனால் பள்ளப்பட்டி, அம்மச்சியாபுரம், கொடுவிலார்பட்டி, அரண்மனைப்புதூர், அய்யனார்புரம், குன்னூர் போன்ற பகுதிகளில் அமைந்துள்ள கிணறுகளில் நீர்மட்டம் குறைந்தது. நிலத்தடி நீர்மட்டமும் குறைந்து விட்டது. இதன் விளைவாக விவசாயத்தில் மிகப்பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக அம்மச்சியாபுரம், குன்னூர், பள்ளப்பட்டி, கொடுவிலார்பட்டி, அய்யனார்புரம் போன்ற பகுதிகளில் நெல் சாகுபடி நடந்த நிலங்கள் பெரும்பாலும் குறுகிய கால பயிர் சாகுபடிக்கு மாற்றப்பட்டன. நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததால் கோடை காலத்தில் கிணறுகளும் வறண்டு போகின்றன. இதனால் பள்ளப்பட்டியில் வைகை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. தடுப்பணை வேண்டும் என்ற கோரிக்கையை பல ஆண்டுகளாக விவசாயிகள் முன்வைத்து வருகின்றனர். கலெக்டர் அலுவலகம், பொதுப்பணித்துறை அலுவலகங்களில் இதுதொடர்பாக பலமுறை விவசாயிகள் மனு கொடுத்துள்ளனர்.
1,000 ஹெக்டேர் பயன்பெறும்
இந்த தடுப்பணை கட்டப்பட்டால் பள்ளப்பட்டி, அம்மச்சியாபுரம், குன்னூர், அய்யனார்புரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள சுமார் 1,000 ஹெக்டேர் விளை நிலங்கள் நேரடி பாசன வசதி பெற வாய்ப்புள்ளது. இதன்மூலம் பயிர் சாகுபடி பன்மடங்கு பெருகும் வாய்ப்புள்ளது.
விவசாயிகளின் தொடர் கோரிக்கையால் கடந்த சில ஆண்டுகளாக இங்கு தடுப்பணை கட்டுவதற்கு பல்வேறு கட்ட ஆய்வுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பள்ளப்பட்டி மயானம் அருகில் தடுப்பணை கட்டுவதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டு திட்ட மதிப்பீடு தயார் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், அரசிடம் இருந்து இதற்கான அனுமதி எதுவும் வரவில்லை.
எப்போது தடுப்பணை கட்டும் திட்டம் செயல்படுத்தப்படும் என்ற ஏக்கத்தோடு விவசாயிகள் காத்திருக்கின்றனர்.
இதுதொடர்பாக பள்ளப்பட்டி பகுதியை சேர்ந்த விவசாயிகள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-
விவசாயம் செழிக்கும்
விவசாயி பாஸ்கரன்:- இந்த தடுப்பணை கட்டப்பட்டால் சுற்றுவட்டாரத்தில் 5 கிலோமீட்டர் தூரம் வரை நிலத்தடி நீர்மட்டம் உயர வாய்ப்பு உள்ளது. நேரடியாக ஆயிரம் ஹெக்டேரும், மறைமுகமாக சுமார் 2 ஆயிரம் ஹெக்டேரும் பயன்பெறும். வைகை ஆற்றில் சங்ககோணாம்பட்டி பகுதியில் தடுப்பணை அமைந்துள்ளது. அதன்பிறகு வைகை அணை வரை இடையே எங்கும் தடுப்பணை இல்லை. இந்த தடுப்பணை அமைந்தால் விவசாயம் செழிக்கும். அதிகாரிகள் இங்கு பலமுறை வந்து ஆய்வு செய்துவிட்டு சென்றுள்ளனர். எனவே, விரைவில் அரசு நல்ல அறிவிப்பை வெளியிட வேண்டும். விவசாயம் மட்டுமின்றி கால்நடைகளுக்கான குடிநீர் தேவையும் பூர்த்தி அடையும். இந்த பகுதிகளில் கால்நடை வளர்ப்பு தொழிலுக்கு ஏதுவான சூழல் உள்ளதால், கால்நடை வளர்ப்பு மற்றும் பராமரிப்புக்கு இந்த தடுப்பணை உதவிகரமாக இருக்கும்.
நிலத்தடி நீர்மட்டம் உயரும்
விவசாயி லட்சுமணன்:- பள்ளப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காய்கறி, தென்னை, சிறுதானியங்கள், பயறு வகைகள் என அனைத்து விதமான விவசாயமும் நடக்கிறது. 20 ஆண்டுகளுக்கு முன்பு நெல் சாகுபடி அதிக அளவில் நடந்தது. அப்போது ஆற்றில் தண்ணீர் ஓட்டம் இருந்து கொண்டே இருக்கும். ஆற்றுக்குள் இருகரைக்கும் இடையே ஆற்றுமணல் அதிக அளவில் இருக்கும். கோடை காலத்தில் ஆற்றில் தண்ணீர் ஓட்டம் குறைந்தால், மணலில் குழி தோண்டி, அதில் ஊற்றெடுக்கும் தண்ணீரை விவசாயத்துக்கு பயன்படுத்தி வந்தனர். பின்னர் ஆற்றுமணல் அள்ளப்பட்டது. பல்வேறு அரசு அலுவலகங்கள் கட்டுவதற்கும் இங்கிருந்து தான் மணல் சென்றது. பெரியகுளம் அருகே சோத்துப்பாறை அணை கட்டுவதற்கும் இங்கிருந்து மணல் சென்றது. மண் அள்ளக்கூடாது என்று அப்போது விவசாயிகள் போராட்டங்கள் செய்தும் பயனில்லை. இன்றைக்கு இந்த ஆற்றில் மணல் இன்றி பாறைகளாக காட்சி அளிக்கிறது. இதனால், நிலத்தடி நீர் மேம்படுவது இல்லை. தடுப்பணை கட்டினால் மணல் படியும். தண்ணீரும் தேங்கும். அதன் மூலம் நிலத்தடி நீர்மட்டம் உயரும்.
மீண்டும் நெல் சாகுபடி
விவசாயி சுப்புராஜ்:- தடுப்பணை கட்டுவதற்கு தேர்வு செய்யப்பட்ட இடத்துக்கு அருகில் தான் எனது விவசாய நிலம் இருக்கிறது. முன்பு இங்கு நெல் சாகுபடி தான் அதிக அளவில் நடந்தது. 1982-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தின் போது நெல் மூட்டைகளும் நீரில் மூழ்கின. அதன்பிறகு அந்த அளவுக்கு வெள்ளம் இல்லை. அப்போதைய காலத்தில் ஆற்றில் மணல் அதிகம் இருக்கும். கோடை காலத்திலும் குறைவான தண்ணீராவது ஓடும். அதன்மூலம் சுற்றுவட்டார பகுதிகளில் கிணறுகளின் நீர்மட்டம் வற்றாமல் இருக்கும். தற்போது ஆற்றில் தண்ணீர் வற்றிய வேகத்தில் கிணறுகளிலும் நீர்மட்டம் குறைந்து விடுகிறது. தடுப்பணை கட்டினால் மீண்டும் நெல் சாகுபடியை மேற்கொள்ள முடியும்.
எதிர்பார்ப்பும், ஏமாற்றமும்
விவசாயி சீனிராஜ்:- இந்த தடுப்பணை என்பது விவசாயிகளின் கனவு திட்டமாகும். இந்த கனவை சுமந்து 20 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருக்கிறோம். இங்கு வைகை ஆற்றை வழிமறித்து தடுப்பணை கட்டினால் ஆற்றின் இருபகுதிகளிலும் சுமார் ஆயிரம் ஹெக்டேர் நிலங்கள் நேரடி பாசன வசதி பெறும். இதில் சுமார் 600 ஹெக்டேர் நிலங்கள் நெல் சாகுபடி நிலங்கள் ஆகும். அத்துடன் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து கிணற்றுப் பாசனம், ஆழ்துளை கிணற்றுப் பாசனம் மூலம் பாசன பரப்பளவும், பயன்பாடும் மேலும் அதிகரிக்கும். ஒவ்வொரு பட்ஜெட் கூட்டத்தொடரின் போதும் இந்த தடுப்பணை குறித்த அறிவிப்பு வராதா என எதிர்பார்த்து ஏமாற்றம் மட்டுமே அடைந்து வருகிறோம். எனவே தடுப்பணை அமைக்க அரசு நிதி ஒதுக்கீடு செய்து, விரைவில் தடுப்பணை கட்ட வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.