தூத்துக்குடியில் 4-வது நாளாக விசைப்படகு மீனவர்கள் வேலைநிறுத்தம்

தூத்துக்குடியில் கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை 4-வது நாளாக விசைப்படகு மீனவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-02-09 18:45 GMT

தூத்துக்குடியில் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று 4-வது நாளாக விசைப்படகு மீனவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இன்று(வெள்ளிக்கிழமை) உதவிகலெக்டர் முன்னிலையில் சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் நடக்கிறது.

கோரிக்கை

தூத்துக்குடி மீன்பிடிதுறைமுகத்தில் சுமார் 245 விசைப்படகுகள் உள்ளன. இதில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் வாரந்தோறும் தொழிலாளர்களுக்கு வழங்கக்கூடிய பங்கு தொகையை மீண்டும் தர வேண்டும். வாரத்தில் 6 நாட்கள் கடலுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 6-ந் தேதி முதல் விசைப்படகு மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

4-வது நாளாக வேலைநிறுத்தம்

நேற்று 4-வது நாளாக வேலைநிறுத்தம் நீடித்து வருகிறது. இந்த நிலையில் விசைப்படகு உரிமையாளர்கள் மற்றும் விசைப்படகு மீன்பிடி தொழிலாளர் சங்கத்தினர் கலந்து கொண்ட சமாதான கூட்ட பேச்சுவார்த்தை நடந்தது. இதில் சுமூக உடன்பாடு எட்டப்படவில்லை. இதனை தொடர்ந்து விசைப்படகு தொழிலாளர் சங்கத்தினர் தொடர்ந்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக விசைப்படகு மீன்பிடி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் பல கோடி ரூபாய் வர்த்தகம் இழப்பு ஏற்பட்டு உள்ளது.

மேலும் இன்று (வெள்ளிக்கிழமை) உதவி கலெக்டர் முன்னிலையில் சமாதான பேச்சு வார்த்தை கூட்டம் நடக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்