காலியாக உள்ள நீதிபதி பணியிடங்களை நிரப்ப வேண்டும்

காலியாக உள்ள நீதிபதி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என சென்னை ஐகோர்ட்டு நீதிபதியிடம் வக்கீல்கள் சங்கம் கோரிக்கை வைத்தனர்.

Update: 2022-10-08 18:45 GMT

சென்னை ஐகோர்ட்டு நீதிபதியும், சிவகங்கை மாவட்ட நீதிமன்றங்களின் நிர்வாக நீதிபதியுமான மஞ்சுளா சிவகங்கை வந்தார். அவரை மாவட்ட முதன்மை செசன்ஸ் நீதிபதி சுமதி சாய்பிரியா, கூடுதல் நீதிபதி சத்தியதாரா, வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி முத்துக்குமார், மகிளா மற்றும் போக்சோ நீதிமன்ற தலைமை நீதிபதி சரத்ராஜ் ஆகியோர் வரவேற்றனர். தொடர்ந்து அவர் நீதிபதிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி மஞ்சுளாவிடம் சிவகங்கை வக்கீல்கள் சங்கத்தின் தலைவர் நாகேஸ்வரன், செயலாளர் சித்திரைச்சாமி தலைமையில் வக்கீல்கள் மனு கொடுத்தனர். அதில் கூறியுள்ளதாவது:-

சிவகங்கை கோர்ட்டில் 300 பேருக்கு மேல் பணிபுரிகிறார்கள். 400 வக்கீல்கள் உள்ளனர். வழக்குகள் தொடர்பாக 700-க்கும் மேற்பட்டோர் தினசரி வந்து செல்கின்றனர். இங்கு கேண்டீன் வசதி இல்லாமல் சிரமமாக உள்ளது. எனவே கேண்டீன் தொடங்க வேண்டும்.

மேலும் கோர்ட்டு வளாகத்தில் வங்கி தொடங்கவும், ஸ்டாம்ப் விற்பனையாளர்கள் நியமிக்கவும் உத்தரவிட வேண்டும். விரைவு மகிளா அமர்வு நீதிமன்றம் மற்றும் எஸ்.சி., எஸ்.டி. வழக்குகள் விசாரணை நீதிமன்றத்திற்கும், காலியாக உள்ள நீதிபதி பதவிகளை விரைவில் நிரப்ப வேண்டும். என்.டி.பி.எஸ். என்று அழைக்கப்படும் போதை மருந்துகள் போன்றவற்றை விசாரிக்கும் நீதிமன்றம் புதுக்கோட்டையில் உள்ளது. எனவே சிவகங்கை மாவட்டத்திற்கு தனியாக ஒரு நீதிமன்றம் அமைக்க வேண்டும். நில அபகரிப்பு பிரிவு நீதிமன்றம் தற்போது ராமநாதபுரத்தில் செயல்பட்டு வருகிறது. அதை சிவகங்கையில் அமைக்க வேண்டும். சிவகங்கை கோர்ட்டில் வக்கீல்ளுக்கு தனியாக அறை கட்டித்தர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்